கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அடுத்த திருநாவலூரில் உள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தெலுங்கானா மாநில ஆளுநரும் புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தர்ராஜன் மாணவ மாணவிகளுக்கு பட்டம் அளித்து சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், “படித்த இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும். இளைஞர்கள் ஆசிரியர் ஆக வேண்டும், மருத்துவராக வேண்டும் என்று எண்ணம் இருப்பதுபோல் அரசியலுக்கு வரவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட வேண்டும். அப்போதுதான் அரசியல் தூய்மையானதாக இருக்கும். ஆளுநர் ஆகிய நான் அரசியல் பேசக் கூடாதே தவிர அரசியலுக்கு மாணவர்கள் வர வேண்டும் என்று அழைப்பு விடுப்பதில் எந்த தவறும் இல்லை.
மாணவர்கள் குறிப்பிட்ட காலத்தில் தங்களது வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவேண்டும். அந்த வாழ்க்கை முறையை தங்களது விருப்பத்திற்கு ஏற்றவாறு அமைக்கும் பட்சத்தில் பெற்றோர்கள் ஒத்துழைப்போடு அமைத்துக்கொள்ள வேண்டும்” என்று பேசினார். நிகழ்ச்சியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன் மற்றும் பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.