புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியில் உள்ள நாகுடி, ஆவணத்தான்கோட்டை ஆகிய கிராமங்களில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திமுக அரசியல் பொதுக் கூட்டம் நடந்தது. அந்தப் பொதுக்கூட்டத்தில் திமுக செய்தித் தொடர்பு இணைச்செயலாளர் தமிழன் பிரசன்னா கலந்துகொண்டு பேசினார்.
அப்போது அவர், தமிழக முதலமைச்சரை அவதூறாகப் பேசியதாகக் கூறி அரசு வழக்கறிஞர், அறந்தாங்கி மற்றும் நாகுடி காவல் நிலையங்களில் புகார் கொடுத்துள்ளார். இந்த வழக்கு விசாரணை இன்று புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வந்தது. விசாரணைக்கு ஆஜராக தமிழன் பிரசன்னாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இன்று புதுக்கோட்டை தெற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணிச் செயலாளர் அறந்தாங்கி வெங்கடேசன், வடக்கு மாவட்ட வழக்கறிஞர் சிவக்குமார், மூத்த வழக்கறிஞர் திருஞானசம்மந்தம் மற்றும் திமுக வழக்கறிஞர்களுடன் தமிழன் பிரசன்னா நீதிமன்றத்தில் ஆஜரானார்.
நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்து செய்தியாளர்களிடம் பேசியதாவது, “முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர் விஜயபாஸ்கரால் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. வழக்கு போட்டு முடக்கிவிடலாம் என்று நினைத்தார்கள். எங்களை ஒருபோதும் முடக்கிவிட முடியாது. தேர்தலும் முடிந்துவிட்டது இனி அவருடைய செயல்பாடுகள் தமிழ்நாட்டில் இருந்து முடித்து வைக்கப்பட உள்ளது. நீதிமன்றத்தில் நல்ல தீர்ப்பு, கண்ணியமான தீர்ப்பு வரும் அதற்காக எங்கள் தரப்பு நியாயத்தை எடுத்து வைத்துள்ளோம்” என்றார்.