Skip to main content

“ஜனநாயகத்தில் மக்களே அதிகாரமிக்கவர்கள்” - மோடியை தாக்கும் தமிழச்சி

Published on 08/06/2024 | Edited on 08/06/2024
Tamilachi Thangapandian criticized Modi and BJP

ஏழு கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது. அதில் 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றுள்ளது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பா.ஜ.க தனித்து 240 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியிருந்தது.

ஆட்சி அமைக்க தனிப்பெம்ருபான்மை கிடைக்காததால் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சி மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சியை மத்தியில் அமைக்கிறது பாஜக. இந்த நிலையில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளையும் வென்றுள்ளது. ஆனால், திமுக கூட்டணி 40 தொகுதிகளை வென்றும் பயனில்லை எனப் பாஜகவினர் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து தனது எக்ஸ் வலைத்தளபக்கத்தில் பதிலளித்த திமுக எம்.பி. தமிழச்சி தங்கப்பாண்டியன், “தங்களை எதுவும் செய்துவிட முடியாது என்ற இறுமாப்பில் இருந்த பாஜக,  இப்பொழுது பிற மாநிலக் கட்சிகளை அரவணைத்துச் செல்ல வேண்டிய சூழலுக்கு வந்திருக்கிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மோடி தலைக்கு மேல் தூக்கி வணங்கியிருக்கிறார், ஜனநாயகம் என்பது அதிகாரம் செலுத்துவதில்லை.  அடங்கி அரவணைத்துச் செல்வது என்பதை பத்தாண்டுகளுக்குப் பிறகு பாஜக உணரத் தொடங்கியிருக்கும்.  தாங்கள் எதைச் செய்தாலும் கேட்பதற்கு ஆள் இல்லை என்ற நிலையிலிருந்து இறங்கி வந்திருக்கும். இனி பாஜக அசைக்கவே முடியாத சக்தி என்று ஊடகங்களால் கட்டமைக்கப்பட்டு மக்களை நம்ப வைக்க நடந்த முயற்சிகள் உடைத்து நொறுக்கப்பட்டிருக்கிறது. 

ஜனநாயகத்தில் மக்களே அதிகாரம் மிக்கவர்கள். தனிமனிதர்களோ அல்லது ஒரு இயக்கமோ மக்களைவிட அதிகாரம் கொண்டது இல்லை என்பதை இந்தத் தலைமுறைக்கு 2024 தேர்தல் உணர்த்தியிருக்கிறது. ஒருவேளை தமிழ்நாடு வேறு மாதிரி முடிவெடுத்திருந்தால் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைத்திருக்கக் கூடும். மேலே சொன்னது எதுவுமே நடக்காமல் போயிருக்கலாம். தமிழ்நாடு ஜனநாயகத்தை காப்பாற்றியிருக்கிறது . மக்களே முக்கியம் என்பதைக் காட்டியிருக்கிறது. அதனால்தான், இதன் பெயர் ‘நாட்டை வழிநடத்தும் நாற்பதுக்கு நாற்பது’" என்று பாஜகவை கடுமையாக சாடியுள்ளார்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

‘பேக் டூ ஃபார்ம்’ - ராகுலின் செயலால் உறைந்துபோன நாடாளுமன்றம்!

Published on 27/06/2024 | Edited on 27/06/2024
Rahul gandhi performance in Parliament has surprise many people

இந்தியாவின் பிரதமராக, மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பதவியேற்கும் விழா டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் கடந்த 9 ஆம் தேதி நடைபெற்றது. இதையடுத்து, 18 வது மக்களவையில் முதல் கூட்டத்தொடர் கடந்த 24 ஆம் தேதி காலை 11 மணியளவில் தொடங்கியது. இந்த கூட்டத் தொடரையொட்டி மக்களவைக்குப் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட எம்.பி.க்களுக்கு, தற்காலிக சபாநாயகர் பர்த்ருஹரி மகதாப் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். மறுபக்கம், இந்தியா கூட்டணி சார்பில், காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அவரது இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தில், இந்தியா கூட்டணி கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற குழுத் தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில், இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி.. மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக, ராகுல் காந்தியை தேர்வு செய்யப்பட்டிருப்பதாக அறிவிப்பு வெளியானது. மக்களவை காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி தேர்வானதை, அக்கட்சியின் பொதுச்செயலாளர் வேணுகோபால் அறிவித்தார்.

இன்னொருபுறம், 18வது மக்களவைக்கான சபாநாயகரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல், ஜூன் 26ம் தேதியான இன்று நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. கடந்த முறை, தனிப்பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சியமைத்ததால்.. தனிப்பட்ட முறையில் பாஜக சபாநாயகரைத் தேர்வு செய்தது. ஆனால் இம்முறை பெரும்பான்மை இல்லாத பட்சத்தில், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்துள்ளதால்.. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு, சபாநாயகர் பதவி கொடுக்கப்படலாம் என்ற பேச்சுகளும் உள்ளன. அதற்காக, தெலுங்கு தேசக் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவும் அழுத்தம் தந்ததாகவும் செய்திகள் உலாவின.

முன்னதாக மக்களவையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, வயநாடு தொகுதியின் எம்பி பதவியை ராஜினாமா செய்த பிறகு.. ரேபரேலி மக்களவை தொகுதியின் உறுப்பினராகப் பதவியேற்றார். அப்போது, அரசியல் சாசன பிரதியைக் கையில் ஏந்தியவாறு ஆங்கிலத்தில் உறுதிமொழி கூறி பதவியேற்ற ராகுல் காந்தி, இறுதியில் இந்தியா வாழ்க! அரசியலமைப்பு வாழ்க! என முழக்கமிட்டார். அவர் பதவியேற்கும்போது, காங்கிரஸ் உறுப்பினர்களும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களும் ஆரவாரக் கோஷங்களை எழுப்பி தங்களது பரிபூரண ஆதரவை வெளிப்படுத்தினர். பின்னர், சபாநாயகர் இருக்கைக்குச் சென்று அவருக்கு மரியாதை நிமித்தமாக வாழ்த்துக்கூறி ராகுல் கை குலுக்கினார். அப்போது, நாடாளுமன்ற பாதுகாவலர் எனச் சொல்லப்படும் நபர்கள் இருவர் நின்றனர். அதுவரை பதவியேற்ற ய யாரும் அவர்களைக் கண்டுகொள்ளவில்லை. ஆனால், ராகுல் சக மனிதனை மதிக்கும் விதமாக, அவரிடம் வலியச் சென்று கைகுலுக்கினார். அவருடன் நின்ற மற்றொருவரிடமும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். இதுதான் தலைமைப் பண்பு.. இவர்தான் தலைவர் எனப் பலரும் இந்த வீடியோ காட்சியைப் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர்.

இதேபோல.. ஆளும் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் 17-வது மக்களவையின் சபாநாயகராக இருந்த ஓம் பிர்லா போட்டியிடுகிறார். எதிர்க்கட்சிகள் சார்பில் காங்கிரசைச் சேர்ந்த, நாடாளுமன்ற அலுவல்களில் அதிக அனுபவம் பெற்ற காங்கிரஸ் மூத்த தலைவரான கொடிக்குனில் சுரேஷ் களமிறக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினரும் கேரள மாநிலத்தின் மாவேலிக்கரை தொகுதியின் எம்.பி.யுமான அவர், எட்டாவது முறையாக நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். மக்களவை சபாநாயகர் தேர்வு குறித்து பேசிய ராகுல் காந்தி, “எதிர்க்கட்சிகளுக்கு துணை சபாநாயகர் பதவியை வழங்கினால், மக்களவை சபாநாயகர் தேர்வில் அரசுக்கு ஆதரவளிப்போம். மக்களவை துணை சபாநாயகர் பதவி எதிர்க்கட்சிகளுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதே நாடாளுமன்றத்தின் மரபு. எதிர்க்கட்சிகள் ஆக்கபூர்வமாக அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். துணை சபாநாயகர் பதவி கொடுத்தால் மட்டுமே அரசுக்கு எதிர்க்கட்சிகளின் ஆதரவு என்பதை ராஜ்நாத் சிங்கிடம் தெளிவாக கூறிவிட்டோம். மீண்டும் அழைப்பதாக ராஜ்நாத் சிங் கூறினார். ஆனால் அவர் இன்னும் அதை செய்யவில்லை. எங்கள் தலைவர் அவமதிக்கப்படுகிறார்.” என்று தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், கடந்த 26ஆம் தேதியன்று முற்பகல் 11 மணிக்கு மக்களவை சபாநாயகர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலை தற்காலிக சபாநாயகர் பர்த்ருஹரி மகதாப் நடத்தினார். பாஜக கூட்டணி வேட்பாளர் ஓம் பிர்லா பெயரை பிரதமர் மோடி முன்மொழிந்தார். மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள், தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சி எம்பிக்கள் வழி மொழிந்தனர். இதேபோல இந்தியா கூட்டணி வேட்பாளர் பெயரை திமுகவின் கனிமொழி, தேசியவாத காங்கிரசின் சுப்ரியா சுலே உள்ளிட்டோர் வழிமொழிந்தனர். பின்னர் குரல் வாக்கெடுப்பு மூலம் சபாநாயகர் பதவிக்கான தேர்தல் நடத்தப்பட்டது. குரல் வாக்கெடுப்பின் முடிவில் பாஜக கூட்டணி வேட்பாளர் ஓம் பிர்லா, லோக்சபா சபாநாயகராகத் தேர்வு செய்யப்பட்டார்.

பின்னர் பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ ஆகியோர் புதிய சபாநாயகர் ஓம் பிர்லாவை இருக்கைக்கு அழைத்துச் சென்று அமரவைத்தனர். அப்போது, பிரதமர் மோடி இன்முகத்தோடு ராகுலை அழைத்தார். இதனால் சபை ஆர்ப்பரித்தது. பின்னர், அனைவரும் புதிய சபாநாயகர் ஓம் பிர்லாவை வாழ்த்திப் பேசினர். ராகுல்காந்தி எதிர்க்கட்சி தலைவராகப் பொறுப்பேற்றது ஜனநாயகத்துக்கு புது ரத்தம் பாய்ச்சப்போகிறது எனக் காங்கிரசார் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.

Next Story

“பெரியார் கருத்து இந்த மண்ணில் மேலும் செழுமை பெற வேண்டும்” - தொல்.திருமாவளவன் எம்.பி.,

Published on 27/06/2024 | Edited on 27/06/2024
 thol thirumavalavan speech about VIT Viswanathan

கல்விக்கோ முனைவர் கோ.விசுவநாதனுக்கு அமெரிக்கா, நியூயார்க் மாநில பல்கலைக்கழகத்தால் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்ட்டது. இதற்காக தமிழியக்கம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. அதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், அமைச்சர்கள் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், பி.கே சேகர்பாபு மற்றும் பலர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

இந்நிகழ்வில் தொல்.திருமாவளவன் பேசுகையில் “அண்ணன் விஐடி நிறுவனர், வேந்தர், தமிழுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் எவ்வளவு பொறுப்புணர்வோடு பணியாற்றி வருகிறார் என்பதை நாமும், நாடும் அறியும். இளம் வயதிலேயே நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட பெருமைக்குரியவர். பேரறிஞர் அண்ணாவால் அடையாளம் காணப்பட்ட அறிஞர். பெரியார், அண்ணா போன்றோரால் ஈர்க்கப்பட்ட, சமூக நீதி அரசியலையும், தமிழ் இயக்கத்தையும் உறுதியாக பாதுகாத்து வருபவர். இன்று அவர் ஒரு கல்வி தந்தையாக அறியப்பட்டாலும், அரசியலில் பெரும் பங்களிப்பை செலுத்தியிருக்கிறார் என்பதை எனது பார்வையில் மேலோங்கி நிற்பதாக நினைக்கிறேன். 

வெறும் வேடிக்கை பார்க்காமல், மொழி உணர்வு, இன உணர்வு பேச்சோடு நின்றுவிடாமல், களத்தில் இறங்கு பணியாற்றக் கூடியவர். சமூக நீதி பாதுகாக்கப்பட வேண்டும் என்று பணியாற்றி வருகிறார். அதனால்தான் தமிழ் இயக்கம் என்ற புதிய இயக்கத்தை உருவாக்கி, தமிழ் தேசிய களத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிற அனைவரையும் ஒன்றினைப்பதற்கான பணியைச் செய்து வருகிறார். கட்சி அடிப்படையில் பலர் சிதறி கடந்தாலும், அனைவரையும் ஒரு மேடையில் இணைப்பதற்கான பணிகளைத் தொடர்ந்து செய்து வருகிறார். பெரியார் கருத்து இந்த மண்ணில் மேலும் செழுமை பெற வேண்டும், வலிமை பெற வேண்டும் என்று அவர் நினைக்கிறார்.

தமிழ்நாட்டில் பெரியார் அரசியலுக்கு எதிராக, தமிழ்நாட்டுக்கு எதிரானவர்கள், இங்கு காலூன்ற பார்க்கிறார்கள், அவர்களைத் தடுக்க வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது, என்று சொன்னார். அதிமுக, திமுக போன்ற கட்சிகளைப் பலவீனப்படுத்துவது, ஆபத்தில் முடிந்துவிடும், பெரியாரின் கருத்துக்கும் பேராபத்தாக முடிந்துவிடும், என்று சொன்னவர். அதற்கான பல விசயங்களை என்னிடம் பகிர்ந்துக்கொண்டார். அவரது அனுபவங்களைச் சொன்னார். மக்கள் நலக்கூட்டணி உங்களுடைய தனித்துவத்தை வெளிப்படுத்துவதற்கானதாக இருக்கலாம், ஆனால் மறுபரிசீலனை செய்யுங்கள், வாக்கு சிதறி விடக்கூடாது, என்றார். இதை அவர் சொல்லியிருக்க தேவையில்லை. அவர் திமுக மற்றும் அதிமுக-வுக்காக பணியாற்றவில்லை. அவரது கவலை என்னவென்றால், தமிழகத்தில் தமிழ் அரசியலுக்கு எதிரான சக்திகள் இங்கு காலூன்றி விடுவார்களோ என்ற கவலை. சனாதான சக்திகள் இங்கு வந்துவிடுவார்களோ, என்ற கவலை அவருக்கு. அவர் சொன்னது பற்றிப் பலமுறை பலரிடம் பகிர்ந்திருக்கிறேன். அதன் பிறகு காவிரி நீர் பிரச்சனைக்கு இன்றைய தமிழக முதல்வர், அன்றைய எதிர்க்கட்சி  தலைவர் அண்ணன் ஸ்டாலின் அழைத்த போது, எந்தவித ஆச்சரியமும் இன்றி அவருடன் கைகோர்த்தோம், இன்று தொடர்ந்து அவருடன் பயணித்துக் கொண்டிருக்கிறோம். மக்கள் எங்கள் கூட்டணிக்கு பல வெற்றிகளைக் கொடுத்து வருகிறார்கள். 

அவரது அரசியல் என்பது, மாநில உரிமைகள் பறிபோகக் கூடாது, மாநில சுயாட்சி பாதுகாக்கப்பட வேண்டும். தமிழ்நாடு பாதிக்கப்பட கூடாது, என்ற புரிதல், அந்தத் தெளிவு, அந்தப் பொறுப்புணர்வு அண்ணன் இடத்தில் மேலோங்கி இருப்பதை நான் பார்க்கிறேன். கல்வியை வணிகமாக பார்க்காமல், அதன் மூலம் மக்களை முன்னேற்ற முடியும், சாதி கொடுமைகளில் இருந்து மக்களை மீட்க முடியும், என்ற புரிதல். உயர் கல்வியில் சாதனைப் படைத்திருக்கிறார் என்பதால்தான் அவருக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கியிருக்கிறது. இந்தியாவிலேயே தமிழ்நாடு உயர் கல்வியில் சிறந்து விளங்கிக் கொண்டிருக்கிறது. குஜராத், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்கள் தேசிய சராசரியில் 27 சதவீதத்திற்கு கீழ் உள்ளது. தமிழ்நாடு 47 சதவீதத்தில் இருக்கிரது. இதை ஒரு அரசு மட்டும் செய்ய முடியாது, விஐடி யும் சேர்ந்து செய்திருக்கிறது, என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். இன்று விஐடி பல்கலைக்கழகத்தில் பல்வேறு மாநிலத்தில் இருந்து படிக்கிறார்கள், அதற்குக் காரணம், தரமான கல்வி வழங்குவதுதான். அதனால்தான் இப்படி ஒரு சிறப்பான பட்டம் அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. 

இதைத் தமிழ்நாட்டு பல்கலைக்கழகங்கள் செய்திருக்க வேண்டும், ஆனால் எங்கே இருக்கும் நியூயார்க் பல்கலைக்கழகத்திற்கு அண்ணனின் அருமை தெரிந்திருக்கிறது. அவருக்கு இந்தக் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கிய நியூயார்க் பல்கலைக்கழகத்திற்கு தமிழ்நாட்டு மக்கள் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அண்ணன் அவர்கள், கல்வி தளத்தில் ஆற்றி வருகின்ற பணிகள் பாராட்டுக்குரியவை, போற்றக்கூடியவை என்றாலும், தமிழுக்காகவும், தமிழ் தேசியத்திற்கும் அவர் ஆற்றிக்கொண்டிருக்கின்ற பணிகள் மேலும் சிறப்பானவை. எங்களைப் போன்ற இளைய தலைமுறையினர் அண்ணன் வழியில் பணியாற்றி வருகிறோம். விடுதலை சிறுத்தைகள் கட்சி தமிழ் தேசியத்திற்காக பணியாற்றி வரும் கட்சி என்பதால்தான் தமிழ் இயக்கம் தொடங்கப்பட்ட போது என்னை அழைத்து பாராட்டினார். அதற்காக இந்த நேரத்தில் அண்ணன் விசுவநாதன் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் முன்னெடுக்கக் கூடிய அனைத்து முயற்சிகளுக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி துணையாக இருக்கும் என்று சொல்லி, விடுதலை  சிறுத்தைகள் கட்சியின் தொண்டர்கள் சார்பில் அவரை வாழ்த்தி விடைபெறுகிறேன் என்றார்.