சென்னை வளசரவாக்கத்தில் உள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் நிறுவனர் வேல்முருகன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். ''தமிழக வேலை தமிழருக்கே'' என்ற கோரிக்கையை முன்வைத்து சமூக இடைவெளியுடன் முக கவசம் அணிந்து, கையில் பதாகைகளை ஏந்திக்கொண்டு தற்பொழுது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் தமிழக அரசு பணிகளை 100% தமிழர்களுக்கு வழங்க வேண்டும் என்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டு வருகிறது.
ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த வேல்முருகன்,
''தமிழகத்தில் தமிழர்களின் வேலைவாய்ப்புகள் பறிக்கப்படுகிறது. வடமாநிலத்தை சேர்ந்த இந்தியை தாய் மொழியாக கொண்ட உத்திரப்பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களை சேர்ந்தவர்கள் இங்கு பணிக்கு அமர்த்தப்பட்டு வருகிறார்கள். கடந்த வாரம் திருச்சியில் இருக்கிற ரயில்வே துறைக்கு ஆளெடுப்பு பணியில் இந்த கரோனா தடுப்பு காலத்தில் எந்த இ-பாஸ் விதிமுறையும் பின்பற்றாமல் அவர்களுக்கு 435 இடங்கள் வழங்கப்பட்டுள்ளது. என்.எல்.சி, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா இப்படி அனைத்து நிறுவனங்களிலும் வடமாநிலத்தவர்கள் பணி அமர்த்தப்படுகின்றனர். ஜனநாயக ரீதியாக போராட்டத்தை நடத்தி இந்த மண்ணில் ஆயிரம் பணியிடங்கள் இருக்கிறது என்றால் அதில் குறைந்தபட்சம் 900 பணியிடங்களை இந்த மண்ணின் மக்கள் பெற வேண்டும்.
சட்டமன்றத்தில் அமைச்சர்கள் பதிவு செய்கிறார்கள், தமிழகத்தில் படித்து விட்டு வேலைக்காக பதிவு செய்துள்ளவர்கள் 90 லட்சம் பேர் என்று. தமிழகத்தில் நல்ல கல்வித் தகுதியுடன் லட்சக்கணக்கான மாணவர்கள் குவிந்து கிடக்கிறார்கள். ஆனால் வட இந்தியர்களை இங்கே நியமனம் செய்வதில் என்ன நியாயம்'' எனக் கேள்வி எழுப்பினார்.