நிலம் வாங்குவதுபோல் நாடகமாடி, ஓசூரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபரை கடத்தி பணம் பறித்த சேலத்தைச் சேர்ந்த நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (35). ரியல் எஸ்டேட் அதிபர். இவரை, கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சேலத்தைச் சேர்ந்த சிலர் தொடர்பு கொண்டு, நிலம் வாங்குவது தொடர்பாக பேசினர். அதன்படி அந்த நபர்கள், ஓசூருக்கு நேரில் சென்று நிலத்தையும் பார்வையிட்டனர்.
இந்நிலையில், ஓசூரில் பார்த்த நிலம் பிடித்து இருப்பதாகவும், அதை வாங்குவதற்கான அட்வான்ஸ் தொகையை தரத்தயாராக இருக்கிறோம் என்றும், பணத்தை சேலம் நெய்க்காரப்பட்டிக்கு நேரில் வந்து பெற்றுக்கொள்ளுங்கள் என்றும் கூறி, அழைத்துள்ளனர்.
அதை நம்பி சேலம் வந்த சத்தியமூர்த்தி, நெய்க்காரப்பட்டியில் ஒரு ஹோட்டல் அருகே இருப்பதாக தகவல் கொடுத்துள்ளார். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல், சத்தியமூர்த்தியை காரில் கடத்திச்சென்று, சேலம் பஞ்சந்தாங்கி ஏரி அருகே உள்ள ஒரு கார் பட்டறையில் அடைத்தது.
அந்த பட்டறையில் 8 பேர் கொண்ட மர்ம கும்பல், சத்தியமூர்த்தியிடம் 11 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டியது. தொடர்ந்து நான்கு நாள்களாக சிறை வைத்து, சித்திரவதை செய்ததால், வேறு வழியின்றி அவர் தனது வங்கிக்கணக்கில் இருந்து ஒரு லட்சம் ரூபாயை எடுத்து அந்த கும்பலிடம் கொடுத்தார். அதன்பிறகே கடந்த 15ம் தேதி மர்ம நபர்கள், சத்தியமூர்த்தியை விடுவித்தனர்.
இந்நிலையில் ஓசூருக்கு போய்ச்சேர்ந்த அவர், உறவினர்களுடன் வந்து சேலம் கொண்டலாம்பட்டி காவல்நிலையத்தில் தான் கடத்தப்பட்டது குறித்தும், அந்த கும்பல் மிரட்டிப் பணம் பறித்தது குறித்தும் புகார் அளித்தார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அன்னதானப்பட்டி மற்றும் செவ்வாய்பேட்டையைச் சேர்ந்த ஜீவா (36), சுஜித்குமார் (20), ஷாஜித், கோபால் (28), கவுரிசங்கர் (33) ஆகிய நான்கு பேரை, செவ்வாய்க்கிழமை (ஜன. 21) கைது செய்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் நான்கு பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
இந்த கும்பலிடம் இருந்து சத்தியமூர்த்தியிடம் இருந்து பறித்த ஒரு லட்சம் ரூபாய் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட கார் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.