திருச்சி மாவட்டம், முசிறி வட்டம், சூரம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் இராமச்சந்திரன், மாற்றுத்திறனாளியான இவர் ஊராட்சியில் நடக்கும் ஊழலைத் தட்டிக் கேட்கும் விதத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (Right To Information) மூலம் ஊராட்சியில் நடக்கும் ஊழல்களைப் பற்றி பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஊராட்சி செயலாளர் மற்றும் ஊராட்சித் தலைவர் பெ.கோடி ஆகியோர் இராமச்சந்திரனுக்கு தொடர்ச்சியாகக் கொலை மிரட்டல் விடுத்து வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 23- ஆம் தேதி சூரம்பட்டி ஊராட்சித் தலைவரான பெ.கோடி, சமூக ஆர்வலரான இராமச்சந்திரனை மிகவும் இழிவாகப் பேசியுள்ளார். எனக்கு முசிறி வட்டார அளவில் நிறைய ரவுடிகளுடன் பழக்கம் உள்ளது. உன்னை இரண்டு நாட்களில் கொன்று முடித்துவிடுகிறேன் பார் என்று மிரட்டியுள்ளார்.
இதனைச் சற்றும் எதிர்பார்க்காத இராமச்சந்திரன் அதிக மன உளைச்சலுக்கு உள்ளாகி முசிறி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார், அந்தப் புகாரின் மீது CSR (மனு ரசீது) போடப்பட்டு விசாரணை நடைபெற்றது. இந்த நிலையில் வழக்கை விசாரித்த காவல் ஆய்வாளர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்றும் விசாரித்தார்.
அதைத் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்த ஊராட்சி தலைவர் கோடி மீது காவல்துறையினர் மூன்று குற்றப்பிரிவுகளின் கீழ் (341,294-b,506-1) வழக்குப் பதிவு செய்துள்ளனர். மக்களைப் பாதுகாக்க வேண்டிய ஊராட்சித் தலைவரே சமூக ஆர்வலர் மீது கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்தால், அந்தப் பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.