தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் இயங்கும் திருக்கோயில்களில் உள்ள பழமையான ஓலைச்சுவடிகளைத் திரட்டிப் பாதுகாப்பதோடு நூலாக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது.
இத்திட்டப் பணிக்குழுவின் ஒருங்கிணைப்பாளராக சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் சுவடியியல் துறை பேராசிரியர் முனைவர் சு.தாமரைப்பாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார். இவரின் தலைமையில் 12 சுவடியியல் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இக்குழுவினர் தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு திருக்கோயில்களில் கள ஆய்வு செய்து ஓலைச்சுவடிகளைக் கண்டுபிடித்து முதற்கட்டமாக அட்டவணைப்படுத்தி வருவதோடு பராமரிப்பு பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 199 கோயில்களில் கள ஆய்வு செய்து முடிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிநாதர் ஆழ்வார் திருக்கோயிலில் சுவடி கள ஆய்வாளர் ம.பாலசுப்பிரமணியன் ஒருங்கிணைப்பாளர் ஆலோசனைப்படி கள ஆய்வு செய்தார். கள ஆய்வில் கோயிலில் அரிய ஓலைச்சுவடிகள் இருப்பதைக் கண்டறிந்து இந்து சமய அறநிலையத் துறையின் பதிப்பாசிரியர் முனைவர் ஜெ.சசிகுமார், இந்து சமய அறநிலையத் துறையின் ஆணையர் கே.வி.முரளிதரன், கூடுதல் ஆணையர் சி.ஹரிபிரியா ஆகியோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிகாரிகளின் உத்தரவையடுத்து சுவடி திட்டப் பணியின் ஒருங்கிணைப்பாளர், சுவடியியல் ஆய்வாளர் க.தமிழ்ச்சந்தியா தலைமையிலான ஒரு குழு கோயிலில் இருந்த சுவடிகளைப் பராமரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
இக்கோயிலில் நடைபெறும் சுவடி பராமரிப்புப் பணி குறித்து ஒருங்கிணைப்பாளர் முனைவர் சு.தாமரைப்பாண்டியன் கூறியதாவது, "ஆழ்வார்திருநகர் ஆதிநாதர் ஆழ்வார் திருக்கோயிலில் 19 ஓலைச்சுவடிக்கட்டுகள் கண்டறியப்பட்டன. இச்சுவடிக்கட்டுகளில் ஒரு கட்டு தமிழ் வேதம் என்று போற்றப்படும் நம்மாழ்வார் இயற்றிய திருவாய்மொழி எனும் நூலின் இரண்டாம் பத்துக்கும் மூன்றாம் பத்துக்கும் உரை மட்டும் உள்ள ஓலைச்சுவடி ஆகும். இச்சுவடியில் உரை சற்று சிதைந்த நிலையில் முழுமையற்று காணப்படுகிறது.
எனினும் இச்சுவடி ஆய்வுக்குரிய அரிய சுவடி ஆகும். மேலும் இக்கோயிலின் வெஞ்சினப் பண்டாரக் குறிப்புகள் அடங்கிய 18 சிறிய ஓலைச்சுவடிக்கட்டுகளும் கண்டறியப்பட்டுள்ளன. இச்சுவடிக்கட்டுகளில் கோயிலின் பழமை வரவு செலவு கணக்குக் குறிப்புகள் உள்ளன. இச்சுவடிகள் பழமையானவை என்பதாலும் சுவடிகள் பூச்சிகள் அரித்து செல்லரிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டதால் அவற்றை பராமரித்துப் பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. திருக்கோயிலில் உள்ள அரிய ஓலைச்சுவடிகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுத்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, அரசு செயலாளர் டாக்டர் பி.சந்திரமோகன் ஆகியோருக்கு நன்றி கூறிக் கொள்கிறேன்" என்றார்.