சென்னை தொலைக்காட்சி நிலையமான ‘டிடி தமிழ்’ சார்பில் இந்தி மாத கொண்டாட்டங்களையொட்டி கடந்த ஓராண்டாக பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனையொட்டி இன்று (18.10.2024) நடைபெறும் இந்த கொண்டாட்டங்களின் நிறைவு விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. டிடி தமிழ் தொலைக்காட்சி நிலையம் சார்பில் இந்தி மாதக் கொண்டாட்டங்கள் நடத்தப்படும் சம்பவம் பொதுமக்கள், தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக, டிடி தமிழ் தொலைக்காட்சி நிலையம் சார்பில் வெளியிட்ட அழைப்பிதழில், இந்தி மாதக் கொண்டாட்டங்கள் நடத்தப்படும் என்று கூறியுள்ளது.
இதற்கு தமிழகத்தில் பல்வேறு அரசியல் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதனை தொடர்ந்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், ‘இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி மாதம் கொண்டாடப்படுவதை தவிர்க்க வேண்டும். இந்தியா போன்ற பல்வேறு மொழியில் பேசும் நாட்டில் இந்திக்கு தனி இடம் அளிக்க இயலாது. அரசமைப்புச் சட்டம் எந்த மொழிக்கும் தேசிய மொழி என்ற அந்தஸ்தை தரவில்லை. தகவல் தொடர்பு உள்ளிட்ட காரணங்களுக்காக மட்டுமே ஆங்கிலம் மற்றும் இந்தி பயன்படுத்தப்படுகிறது. உள்ளூர் மொழிகளையும் மத்திய அரசு கொண்டாட வேண்டும். செம்மொழியாக அங்கீகரித்துள்ள அனைத்து மொழிகளையும் சிறப்பிக்க வேண்டும். இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி மொழி சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்துவதை தவிர்க்க வேண்டும். அனைத்து மொழிகளையும் சிறப்பிக்கும் போது சமூகமான உறவை மேம்படுத்த முடியும். இந்தி மாதம் கொண்டாட்டங்களின் நிறைவு விழாவை உடனடியாக நிறுத்த வேண்டும்' எனத் தெரிவித்தார்.
இந்த நிலையில், டிடி தமிழ் தொலைக்காட்சி அலுவலகத்தில் இந்தி தின விழா இன்று (18-10-24) நடைபெற்றது. இந்த விழாவில், சிறப்பு விருந்தினராக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று, தமிழ்நாட்டில் இந்தி திணிக்கப்படவில்லை என்றும் மக்களை கொண்டு தமிழை வைத்து அரசியல் மட்டுமே செய்கின்றனர் என்றும் கூறினார். மேலும் அவர், தமிழ் தமிழ் என்று பேசுபவர்கள் தமிழை இந்தியாவை விட்டு வெளியே கொண்டு செல்ல என்ன செய்தனர்?. தமிழகத்தில் மட்டுமே 3வது மொழியை அனுமதிக்க மறுக்கின்றனர் எனக் கூறி விமர்சனம் செய்திருந்தார்.
இதற்கிடையே, ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்ற இந்த விழாவில், பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்தில், ‘திராவிடம் நல் திருநாடு’ என்ற வார்த்தை விடுபட்டதால் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. டிடி தமிழ் சார்பில் இந்தி மாத கொண்டாட்டங்கள் விழாவில் பங்கேற்ற ஆளுநர் ரவியும் மற்றும் அங்கிருந்தவர்களும் எழுந்து நின்று தமிழ்த்தாய் வாழ்த்து பாடினர். அப்போது, ‘தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்’ என்ற வரியை சரியாக பாடாமல் அடுத்த வரியான ‘தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே’ என்று பாடினர். இதனால் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பல அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.