தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. கூட்டணி அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. அதேபோல், 90%- க்கும் மேற்பட்ட நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. அதற்கடுத்து அ.தி.மு.க, பா.ஜ.க., அ.ம.மு.க. உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்களும் குறிப்பிடத் தகுந்த இடங்களில் வெற்றி பெற்றுள்ளார்.
இந்த நிலையில், சென்னை தி.நகரில் உள்ள பா.ஜ.க.வின் மாநிலத் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் இன்று (22/02/2022) இரவு 07.30 மணிக்கு செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை, "பா.ஜ.க.வின் வலிமையை உணர்த்துவதற்காக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டோம். அ.தி.மு.க.வுடனான தேசிய கூட்டணி தொடரும்; பா.ஜ.க. வலிமைப் பெற்றுக் கொண்டிருக்கிறது. ஒரு தேர்தலில் அ.தி.மு.க. பின் தங்கிவிட்டதால் குறைத்து மதிப்பிடக் கூடாது. பா.ஜ.க.வை முழுமையாக ஏற்று எங்களுடன் பயணிக்க மக்கள் தயாராகிவிட்டனர். கடின உழைப்பால் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்று மூன்றாவது இடத்திற்கு பா.ஜ.க. வந்துள்ளது" எனத் தெரிவித்தார்.
பின்னர், அலுவலகத்துக்கு வெளியே சரவெடியை வெடித்து அண்ணாமலை தலைமையிலான பா.ஜ.க.வினர் கொண்டாடினர்.