Skip to main content

ஐ.ஐ.டி.யில் தொடரும் சாதிய வன்முறை: தமிழ்நாடு அரசு விசாரணைக் குழு அமைக்க வேண்டும்... தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தல்

Published on 05/07/2021 | Edited on 05/07/2021

 

சென்னை ஐஐடி விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசு விசாரணைக் குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தியுள்ளது. சென்னை உள்ளிட்ட ஐ.ஐ.டி.களில் இடஒதுக்கீட்டை முறையாக அமல்படுத்துவதில்லை. ஆராய்ச்சி, முனைவர் படிப்புகளில் இடஒதுக்கீடு அப்பட்டமாக மீறப்படுவதை ஆய்வுகள், ஆர்.டி.ஐ தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐ.ஐ.டி.களுக்குள் சாதிய ஆதிக்கம் காரணமாக உயிரிழப்புகள் நிகழ்கின்றன. 

 

அண்மையில் சென்னை ஐஐடி உதவிப் பேராசிரியர் விபின், சாதிய அழுத்தத்தின் காரணமாக பணி விலகியுள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மதவெறி காரணமாக கேரளாவைச் சேர்ந்த மாணவி ஃபாத்திமா லத்திப் உயிரிழந்தார். சில நாட்களுக்கு முன்பு கேரள மாணவர் ஒருவர் பாதி எரிந்த நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

 

இந்நிலையில், ஐ.ஐ.டி.யில் தொடரும் அநீதிக்கு எதிராக தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, திராவிடர் விடுதலைக் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், ஆதித்தமிழர் பேரவை, ஆதித்தமிழர் கட்சி, தமிழ்ப் புலிகள் கட்சி, ஐந்திணை மக்கள் கட்சி, திராவிடர் தமிழர் கட்சி உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து புதனன்று (ஜூலை 5) தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தின. 

 

இதன் ஒருபகுதியாக சென்னை ஐ.ஐ.டி. அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பொதுச்செயலாளர் கே. சாமுவேல்ராஜ், “வெளிநாடுகளில் படித்து ஐ.ஐ.டி.யில் பணிக்கு சேர்ந்தால்கூட ஆதிக்க சக்திகளோடு பணியாற்ற முடியாத நிலை உள்ளது. ஐ.ஐ.டி. வளாகத்தில் தாழ்த்தப்பட்ட, பழங்குடி, பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் படிக்க முடியாத நிலை உள்ளது. 

 

அய்யர், அய்யங்கார் இன்ஸ்டிட்டியுட் என்று சொல்வதற்கே ஏற்ப ஐ.ஐ.டி. செயல்படுகிறது. ஐ.ஐ.டி. வளாகம் மர்ம கூடாரமாக உள்ளது. 2020இல் மட்டும் எஸ்.சி., எஸ்.டி., பி.சி., எம்.பி.சி. மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய 902 இடங்களை, பொது இடங்களாக மாற்றியுள்ளனர். கடந்த 70 ஆண்டுகளாக பிராமண ஆதிக்கம், உழைக்கும் மக்களின் இடங்களைத் தொடர்ந்து பறித்துக்கொண்டிருக்கிறது. 

 

இவையெல்லாம் மத்திய அரசு நிறுவனத்தில் நடக்கிறது என மாநில அரசு வேடிக்கை பார்க்கக் கூடாது. ஐ.ஐ.டி.யில் நடைபெறும் கொலை, இடஒதுக்கீடு மீறல் குறித்து பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு தமிழ்நாடு அரசுக்கு உள்ளது.

 

ஐ.ஐ.டி.யில் நடைபெற்றுள்ள ஒவ்வொரு பதவி விலகல், மரணங்கள், இடஒதுக்கீடு மீறல்கள் குறித்து தமிழ்நாடு அரசு உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும். பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், எஸ்.சி., எஸ்.டி. ஆணையம் போன்றவை என்ன செய்கின்றன? சென்னை உயர் நீதிமன்றம் தாமே முன்வந்து இவை குறித்து விசாரித்து நீதி வழங்க வேண்டும்” என அவர் கூறினார்.


தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் கே. மணிகண்டன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், முன்னணியின் நிர்வாகிகள் கே. சுவாமிநாதன், ஜானகிராமன், பி. சுந்தரம், முரளி, சந்துரு, திராவிடர் விடுதலைக் கழக நிர்வாகிகள் ந. அய்யப்பன், உமாபதி, அம்பேத்கர் மக்கள் சக்தி கட்சித் தலைவர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் பேசினர். இதனைத் தொடர்ந்து ஐஐடி பதிவாளர், டீன் ஆகியோரை சந்தித்து முன்னணியின் நிர்வாகிகள் மனு அளித்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்