தமிழகத்தில் இரண்டாம் நிலைக் காவலர்கள் மற்றும் இரண்டாம் நிலை தீயணைப்பு காவலர்கள், இரண்டாம் நிலை சிறை காவலர்கள், இரண்டாம் நிலை ஆயுதப்படை காவலர்கள் உள்ளிட்ட 8,823 காலிப்பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு இன்று காலை 10.00 மணிக்கு தொடங்கியது. இந்த தேர்வில் சுமார் 3.22 லட்சம் பேர் பங்கேற்கின்றனர். தமிழக முழுவதும் 32 மாவட்டங்களில் 228 மையங்களில் இன்று காவலர் தேர்வு நடக்கிறது. சென்னையில் மட்டும் 13 மையங்களில் காவலர் தேர்வு நடைபெறவுள்ளது. தேர்வு மையங்களுக்கு செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக்குழுமம் 2,465 இரண்டாம் நிலைக் காவலர்கள் (ஆயுதப்படை), 5,962 இரண்டாம் நிலைக் காவலர்கள் (தமிழ்நாடு சிறப்புக் காவல் படை), 208 இரண்டாம் நிலை சிறை காவலர்கள் மற்றும் 191 தீயணைப்போர் பதவி என 8826 பணியிடங்கள். இது தவிர மற்ற பணியிடங்கள் 62 என மொத்தம் 8888 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த மார்ச் 6- ஆம் தேதி வெளியிடப்பட்டது.விண்ணப்பிக்க ஏப்ரல் 8- ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.
இன்று நடைபெறவிருக்கும் எழுத்து தேர்வில் மொத்தம் 80 மதிப்பெண்களுக்கு வினாக்கள் கேட்கப்படும். பொது அறிவில் 50 கேள்விகளும், உளவியலில் 30 கேள்விகளும் கேட்கப்படும். வினாக்கள் ஆப்ஜெக்டிவ் வடிவில் இடம் பெற்றிருக்கும். காலை 10 மணிக்கு தொடங்கும் தேர்வு 11.20 மணி வரை, சுமார் 1 மணி 20 நிமிடங்கள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த எழுத்து தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் அடுத்து உடல் தகுதி தேர்வுக்கு தகுதி பெறுவர். இந்த எழுத்துத்தேர்வுக்கான முடிவுகள் இரண்டு மாதத்திற்குள் இணைய தளத்தில் வெளியாகும் என்று தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.