சென்னை கிண்டியில் தென் மாநில காவல்துறை ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, அந்தமான் மாநில காவல்துறை இயக்குநர்கள் பங்கேற்றுள்ளனர். நிகழ்ச்சி மேடையில் பேசிய முதல்வர், ''காவல்துறை போதைப்பொருட்களின் தீமைகளை மாணவர்கள் மத்தியில் பிரச்சாரம் செய்தது. கல்வி நிலையங்கள் அருகில் போதைப்பொருள் விற்பனையைத் தடுப்பது போன்ற நடவடிக்கைகள் மிக நல்ல பலன்களை கொடுத்துள்ளது. உயர் அதிகாரிகள் முன் நடத்தப்படும் தொடர் ஆய்வுக் கூட்டங்கள் மூலம் தமிழ்நாடு பாதிப்பு இல்லாத மாநிலமாக உருவாக்குவதற்கான சரியான பாதையில் செல்வது உறுதி செய்யப்பட்டுள்ளது.
குற்றவாளிகள் மீது பொருளாதார நடவடிக்கை எடுப்பதில் தமிழ்நாடு காவல்துறை முன்னோடியாக திகழ்ந்து வருகிறது. இதன் மூலம் குற்றவாளிகளின் பொருளாதார பலம் தவிர்க்கப்பட்டுள்ளது. ஆனாலும் போதைப்பொருள் குற்றவாளிகளின் தொடர்பு மற்றும் அவர்களின் சொத்துக்கள் பல மாநிலங்களில் பரவிக் கிடக்கிறது. எனவே போதைப் பொருட்களை ஒழிக்க ஒன்றிணைந்து முயற்சி தேவைப்படுகிறது என்பதால் தான் நாமெல்லாம் இன்று ஒன்று கூடி இருக்கிறோம்.
குற்றவாளிகளை கைது செய்வதற்கும், விசாரணை மேற்கொள்ளவும் மாநிலத்திற்கு வருகை தரும் தமிழ்நாடு காவல்துறையினருக்கு உங்கள் ஒத்துழைப்பு மிகவும் தேவை. அதை வழங்குமாறு நான் கேட்டுக்கொள்ள கடமைப் பட்டிருக்கிறேன். குறிப்பாக தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் தமிழ்நாட்டுக்குள் வருவதை தடுக்க தமிழ்நாடு காவல்துறையினரும் அண்டை மாநில காவல்துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். சமீபத்தில் கேரள காவல்துறைகொடுத்த தகவலை வைத்து நாமக்கல் மாவட்டத்தில் ஏடிஎம் பணத்தை கொள்ளையடித்த கும்பலை தமிழ்நாடு காவல்துறை வெற்றிகரமாக கைது செய்தனர். இந்த குற்றவாளிகள் கேரளாவில் வெவ்வேறு இடங்களில் ஏடிஎம் கொள்ளை சம்பவத்தை நடத்திவிட்டு திருச்சூரிலிருந்து தப்பித்தார்கள். இந்த கும்பல் பல்வேறு மாநிலங்களில் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது. தமிழ்நாடு காவல்துறை உடனடியாக சம்பந்தப்பட்ட மாவட்டங்களை உஷார் படுத்தியது. இந்த பாராட்டுக்குரிய பணியை இணைந்து நிறைவேற்றிய தமிழ்நாடு மற்றும் காவல் துறையினரை நான் வாழ்த்துகிறேன். இந்த மாதிரி ஒருங்கிணைப்பை நம் எல்லோருக்கும் முன்னெடுப்பது தான் இதுபோன்ற கூட்டங்களின் நோக்கம்'' என்றார்.