திருச்சி மாவட்டம், புத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் திலீபன்(36). இவர், தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்றச் சங்க திருச்சி மாவட்ட இளைஞரணி செயலாளராகப் பதவி வகித்து வருகிறார். இந்நிலையில் சங்கம் சார்பில் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் கொடியேற்ற விழாவை முன்னிட்டு நிர்வாகிகளைச் சந்தித்து ஆலோசனை செய்வதற்காகச் சந்திரன் (61) என்பவரை அழைத்துக்கொண்டு வாகனத்தில் நேற்று இரவு திருச்சியிலிருந்து லால்குடி நோக்கிச் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது, நெ.1 டோல்கேட் அடுத்து அகிலாண்டபுரம் அருகே வாகனம் சென்றுகொண்டிருந்தபோது 7 பேர் கொண்ட கும்பல் திலீபன் ஓட்டிச்சென்ற கார் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசி கொலை செய்ய முயன்றுள்ளனர். இதனைச் சுதாரித்துக்கொண்ட திலீபன், காரை நிறுத்தாமல் காருடன் சமயபுரம் போலீஸ் நிலையத்திற்குச் சென்று தஞ்சமடைந்தார்.
இதுகுறித்து திலீபன் அளித்த புகாரின் பேரில் நாட்டு வெடி குண்டு வீசிய சம்பவம் தொடர்பாக அகிலாண்டபுரம் கிராமத்தைச் சேர்ந்த கோபால், மதன், நந்தகுமார், வினோத்குமார், ரவி, சுரேஷ் உள்ளிட்ட 7 பேரைச் சமயபுரம் காவல்துறை கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து வெடிக்காத நாட்டு வெடிகுண்டு மற்றும் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களைப் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்திற்குத் திருச்சி மாவட்ட எஸ்.பி சுஜித்குமார் நேரில் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார். முன் விரோதம் காரணமாக இந்தத் தாக்குதல் நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது.