கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டத்திற்கு உட்பட்ட மணம்தவிழ்ந்தபுத்தூர் கிராமத்தில் வசிக்கும் மூதாட்டி காளியம்மாள் (81). இவரது கணவர் ராஜா, 40 ஆண்டுகளுக்கு முன் காலமாகியுள்ளார். இவர்களுக்கு குழந்தை இல்லை. இந்தநிலையில், அதே ஊரில் இந்த மூதாட்டி 10 அடி நீளம், அகலம் உள்ள இடத்தில் குடிசை வீட்டில் விவசாயக் கூலி வேலை செய்தும், கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் கலைஞர் ஆட்சியில் அந்தப் பகுதியில் இருக்கும் திமுக பிரமுகர் அரசன் ஏற்பாட்டால் ரூ. 30 முதல் தற்போது ரூ. 1000 வரை அரசின் கைம்பெண்களுக்கான உதவித் தொகையை பெற்றும் வாழ்ந்துவருகிறார்.
80 வயதைக் கடந்த நிலையில் வயது முதிர்வின் காரணமாக உடல் மெலிந்து வேலைக்கு செல்லமுடியாத நிலையில் படுத்தபடுக்கையாக உள்ளார். இவருக்குப் பிள்ளைகள் இல்லாததால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள், தூரத்து உறவுமுறையினர் ஆகியோர் அவருக்குத் தேவையான சிறு உதவிகளை செய்துவருகிறார்கள். அவர் வாழும் குடிசை வீட்டின் மேல் கூறையில் உள்ள தென்னங்கீற்றுகள் அனைத்தும் சேதமாகி வெயில், மழை பனி என அனைத்தும் அந்தக் குடிசையை பாதித்துள்ளது. இதன் உள்ளேதான் அவர் முடங்கியுள்ளார். மூதாட்டி வீட்டிற்குள் யாரும் உள்ளே செல்வது இல்லை. அவருக்குத் தேவையான கொஞ்சம் கஞ்சி உணவை அந்த வீட்டின் வாசற்படியில் உறவினர்கள் வைத்துவிடுகிறார்கள். ஒருநாளைக்கு ஒரு வேளை மட்டுமே கஞ்சியைக் குடித்துவிட்டு கூரையற்ற குடிசையில் வாழ்ந்துவருகிறார்.
பெற்ற பிள்ளைகள், உடன் பிறந்த உறவுகள் இல்லாததால் கடைசி காலத்தில் இவருக்குத் தேவையான உதவிகளை செய்ய யாரும் இல்லாததால் அவர் துணியைக்கூட கட்டிக்கொள்ள முடியாத நிலையில் குடிசையில் ஒரு பகுதியில் தவழ்ந்து சென்று மலம், சிறுநீர் கழித்துக்கொள்கிறார். பின்னர் அதேபோல் தவழ்ந்து அருகிலே படுத்துக்கொள்கிறார். இதுபோன்ற நிலையில் வாழும் இந்த மூதாட்டியைப் பற்றி அறிந்து, கடந்த சில நாட்களுக்கு முன் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த ஸ்ரீஅபிநவ் புதுப்பேட்டை காவல் நிலைய காவலர்கள் மூலம் 5 கிலோ அரிசி மற்றும் காய்கறிகளை வாங்கி கொடுத்துள்ளார். இதனை மூதாட்டியால் வாங்ககூட முடியவில்லை. பின்னர் காவலர்கள் அதனை வாசற்படியில் வைத்துவிட்டு தகவலைக் கூறிச்சென்றுள்ளனர். இந்த நிலையில் வாழும் மூதாட்டியைப் பார்க்கும் அனைவருக்கும் இது வேதனையை ஏற்படுத்துகிறது.
இதுகுறித்து அந்தப் பகுதியில் உள்ளவர்கள் கூறுகையில், “இந்தப் பாட்டியை ஒறையூர் பாட்டி என்று சொன்னாத்தான் எல்லாருக்கும் தெரியும். நல்லா இருக்கும்போது கூலி வேலை செய்து வாழ்ந்துவந்தார். தற்போது முடியாத காலத்தில் அனாதைபோல் வாழ்ந்துவருகிறார். இரவு நேரத்தில் திடீரென்று கத்துகிறார். குடிசைக்குள் மலம், சிறுநீர் கழிப்பதால் உள்ளே சென்று உதவிகள் செய்ய அச்சமடைகிறார்கள். இவ்வளவு முடியாத நிலையிலும் மூதாட்டியிடம் யார் சென்று பேச்சு கொடுத்தாலும் அவர்களை அடையாளம் கண்டு பேசுகிறார். எனவே இவருக்குத் தமிழ்நாடு அரசு அல்லது தனியார் தொண்டு நிறுவனத்தைச் சார்ந்தவர்கள் முதியோர் இல்லத்தில் இவரை தங்கவைத்து பாதுகாக்க வேண்டும். இல்லையென்றால் அவர் குடியிருக்கும் வீட்டை சரிசெய்து கொடுத்தால் வெயில் மழையின்றி கொஞ்சம் நிம்மதியாக வாழ்ந்துவிட்டு செல்வார்” என்கிறார்கள்.