Skip to main content

தமிழகத்தைத் தாக்க அடுத்த ஏவுகணையும் தயார்நிலையில்! வேல்முருகன்

Published on 13/09/2017 | Edited on 13/09/2017
தமிழகத்தைத் தாக்க அடுத்த ஏவுகணையும் தயார்நிலையில்! வேல்முருகன் 

தமிழகத்தைத் தாக்க “நவோதயா பள்ளி”என்னும் அடுத்த ஏவுகணையும் தயார்நிலையில் உள்ளது என்றும், “நீட்” தேர்வு, மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்வியையே தமிழர்களுக்கு மறுக்கும் சதித்திட்டம் என்றால், “நவோதயா பள்ளி”, அடிப்படை பள்ளிக்கல்வியையே அழிக்கும் நயவஞ்சகத் திட்டமாகும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி வேல்முருகன் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

தமிழகம் டெல்லியின் முற்றுகைக்குள்ளாகியிருக்கிறது. அதனால் சுற்றி வளைத்துத் தாக்கப்படுகிறது.

கார்ப்பொரேட்டுகளின் ஆயுத உதவி கொண்டே இந்தத் தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன.
அந்த வரிசையில் அண்மையில் தொடுத்த ஆயுதம்தான் “நீட்” எனும் மருத்துவக் கல்வி நுழைவுத் தேர்வு!

இப்போது அடுத்த ஆயுதமும் தயார்; அது “நவோதயா பள்ளி”!

“நீட்” தேர்வு, மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்வியையே தமிழர்களுக்கு மறுக்கும் சதித்திட்டம் என்றால், “நவோதயா பள்ளி”, அடிப்படை பள்ளிக்கல்வியையே அழிக்கும் நயவஞ்சகத் திட்டமாகும்.

“மாவட்டத்துக்கு ஒரு பள்ளி; மாதிரிப் பள்ளி; உண்டு உறைவிடப் பள்ளி; கல்வி உட்பட அனைத்தும் இலவசம்; குறிப்பிட்ட அளவே மாணவர், சுமார் 100 பேர், அதுவும் தேர்ந்தெடுத்த திறமையாளர்கள்; மும்மொழித் திட்டம்” – இதுதான் நவோதயா பள்ளி!

1986லேயே கொண்டுவரப்பட்டதுதான்; தமிழ்நாடு தவிர மற்ற மாநிலங்களில் இந்தப் பள்ளி உள்ளது.

இப்போது இந்த நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் தொடங்க சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

அதற்காக தடையில்லாச் சான்றிதழ் வழங்குமாறும் மாவட்டந்தோறும் 30 ஏக்கர் நிலம் ஓதுக்குமாறும் கேட்டுள்ளது.

இதை 8 வாரங்களுக்குள் நீதிமன்றத்தில் தெரிவிக்குமாறு கூறியுள்ளது.

இரண்டு நபர்கள் தொடுத்த பொதுநல மனுவின் அடிப்படையிலேயே நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
 
ஒருவர் தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ‘குமரி மகா சபை’யின் செயலர் ஜெயக்குமார் தாமஸ்; இன்னொருவர் புதுச்சேரியின் காரைக்காலைச் சேர்ந்த வழக்குரைஞர் எஸ்.எம்.ஆனந்தமுருகன்.

மிக எளிதாகவே புரிந்துகொள்ள முடிகிறது, இவர்கள் இருவருமே பாஜகவின் தேர்வுதான் என்பதை!

மாவட்டத்துக்கு 100 திறமையானவர்கள் பார்த்தே தேர்ந்தெடுத்து கல்வி கொடுப்பார்களாம்; மற்றவர்களெல்லாம் என்ன செய்ய வேண்டும் என்று மோடி நினைப்பது நமக்குப் புரியாததல்ல.
கல்வி உட்பட அனைத்தும் இவர்களுக்கு இலவசம்; அப்படியானால் மற்றவர்களுக்கு அது தேவையில்லை என்பதுதானே மோடியின் எண்ணம்?

இந்த குரூர எண்ணங்களின் நோக்கம், இந்தியாவிலேயே தலைசிறந்து விளங்கும் தமிழ்நாடு அரசுப் பள்ளிக் கட்டமைப்பை அழித்தொழிப்பதுதான்!

நமது அரசியல் சாசனம் பள்ளிக்கல்வியை அடிப்படை உரிமை என்றே உறுதி செய்திருக்கிறது. ஆனால் சுதந்திர இந்தியா என்று சொல்லிக் கொண்டே 70 ஆண்டுகளாகியும் டெல்லி ஆட்சியாளர்கள் இந்த உரிமையை உறுதி செய்யவில்லை.

மாறாக தனியாரிடம் ஒப்படைத்து கல்வியையே கடைச்சரக்காக்கிவிட்டனர். இப்போது கார்ப்பொரேட்டுகளிடம் ஒப்படைக்கக் கையெழுத்திட்டுவிட்டு, “நீட்”, “நவோதயா பள்ளி” என்கின்றனர்.

1986ல் இருந்தே இருப்பதுதானே நவோதயா பள்ளி என்று சொல்லலாம்; அப்போதே கார்ப்பொரேட்களுக்கு இசைவாகத்தான் ராஜீவ் காந்தி இதைக் கொண்டுவந்தார் என்பதை மனதிற் கொள்க!

இப்போது “ஒற்றை இந்தியா” படைக்க இதுவும் ஓர் ஆயுதமாகத் தெரிகிறது மோடிக்கு!
 
தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் நவோதயா பள்ளி ஓர் ஏவுகணையாக இருக்கும் என்று கணக்குப் போட்டுத்தான் அதை ஏவத் தயாராகிறார்.

முக்கியமான முடிவுகளையும்கூட ஜனநாயக முறைப்படி நாடாளுமன்ற விவாதமோ, மாநிலங்களுடன் கலந்தாய்வோ இல்லாமல் தான்தோன்றித்தனமாகவே எடுத்துவரும் மோடி, இந்த நவோதயா பள்ளி ஏவுகணையையும் அரசியல் சாசனத்துக்கு எதிராக நீதிமன்ற உத்தரவின் மூலமே தமிழகத்தை நோக்கி ஏவப் பார்க்கிறார்.

இதைக் கண்டிப்பதோடு எச்சரிக்கவும் செய்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி.

மோடி ஏவும் நவோதயா ஏவுகணயை முறியடித்தாக வேண்டியது தமிழகத்தின் வரலாற்றுக் கடமை.

அதைச் செய்து முடிக்க தமிழக அரசு தயாராக வேண்டும்; இதற்கு தமிழக மக்கள் துணையாக இருக்கிறார்கள்; தமிழக வாழ்வுரிமைக் கட்சியும் இதில் உறுதுணை புரியும். இவ்வாறு கூறியுள்ளார். 

சார்ந்த செய்திகள்