தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அரசுமுறைப் பயணமாக சிங்கப்பூர் சென்றுள்ளார். அவருடன் தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் செந்தில்குமார் இ.ஆ.ப. உள்ளிட்ட அதிகாரிகளும் சென்றுள்ளனர்.
அதைத் தொடர்ந்து, சிங்கப்பூரில் நேற்று (07/11/2022) தொடங்கிய 7வது 'World One Health Congress- 2022' மாநாட்டில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துக் கொண்டார். இந்த மாநாட்டை சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப் தொடங்கி வைத்தார்.
நவம்பர் 7 ஆம் தேதி முதல் நவம்பர் 11 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள தலைசிறந்த மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள் உள்ளிட்டோர் உரையாற்றவுள்ளனர்.
சிங்கப்பூரில் உள்ள 'Singapore General Hospital'-க்கு சென்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருத்துவமனையைப் பார்வையிட்டார். அத்துடன், மருத்துவமனையில் நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்த அமைச்சர், மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த தொழில்நுட்பக் கருவிகள் உள்ளிட்டவை குறித்து மருத்துவமனையின் நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார்.
இதனிடையே, தமிழகத்தில் எந்தப் பகுதிக்குச் சென்றாலும், நாள்தோறும் அதிகாலையில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டு வரும் அமைச்சர் மா.சுப்பிரமணியன், சிங்கப்பூரிலும் அதிகாலையில் நடைப்பயிற்சி மேற்கொண்டார். அப்போது, அமைச்சரைக் கண்ட பலரும் அவருடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர். குறிப்பாக, சிங்கப்பூர் வாழ் தமிழர்கள் மட்டுமல்லாது சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த மக்களும் அமைச்சருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.