சென்னை டைடல் பார்க்கில், இன்று (08/11/2022) காலை நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் சார்பில் நடைபெற்ற “நாளையை நோக்கி இன்றே - தலை நிமிர்ந்த தமிழ்நாடு” எனும் ‘தொழில் வளர்ச்சி 4.0’ மாநாட்டில், தமிழ்நாடு விண்வெளி மற்றும் பாதுகாப்புக் கொள்கை 2022-யை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அதைத் தொடர்ந்து, மாநாட்டில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்குகளை முதலமைச்சர் பார்வையிட்டார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "தொழில் வளர்ச்சியில் தமிழகம் உலகளவில் கவனம் ஈர்த்துள்ளது. ஒரு டிரில்லியன் பொருளாதாரத்தை நோக்கி தமிழகம் முன்னேறி வருகிறது. உயர்கல்வியிலும், தொழிற்திறனிலும் தமிழகம் சிறந்து விளங்குகிறது. நான்காம் தலைமுறை தொழில் வளர்ச்சியை இலக்கு வைத்து அரசு செயல்பட்டு வருகிறது.
திறன்மிகு மையங்கள் மூலம் சிறு, குறுந்தொழில்கள் வளர்ச்சி காண முடியும். டிட்கோ- சீமன்ஸ் இணைந்து அமைத்துள்ள திறன்மிகு மையம் நாட்டிலேயே முதலாவது மையம். ரூபாய் 75,000 கோடி முதலீட்டை ஈர்த்து ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்க திட்டமிட்டுள்ளோம். திறன்மிகு மையங்களை தொழிற்துறையினர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.