அமலாக்கத்துறையால் கடந்த ஜூன் மாதம் 14 ஆம் தேதி கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது நீதிமன்றக் காவலில் இருக்கும் நிலையில், செந்தில் பாலாஜியின் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி 2 முறை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார். அதே சமயம் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 8 வது முறையாக நீட்டித்து வருகிற 20 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் இருக்க உத்தரவிட்டிருந்தார்.
இந்த சூழலில் செந்தில் பாலாஜி தரப்பு ஜாமீன் கோரி கடந்த 14 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தது. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை நேற்று (19.10.2023) தள்ளுபடி செய்து உத்தரவிட்டதுடன், மருத்துவ காரணத்தை கூறி ஜாமீன் கோருவதை ஏற்க முடியாது எனவும் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ஜாமீன்கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் நேற்று மேல்முறையீடு செய்திருந்தார். இந்த ஜாமீன் மனு வரும் 30 ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது. இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில் புழல் சிறையில் இருந்து காணொளி வாயிலாக செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து அவரின் நீதிமன்ற காவலை அடுத்த மாதம் 6 ஆம் தேதி வரை (06.11.2023) 9 வது முறையாக நீட்டித்து சென்னை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார்.