Skip to main content

மனம் திருந்திய மாவோயிஸ்ட்டுக்கு மறுவாழ்வு கொடுத்த தமிழக அரசு 

Published on 21/11/2022 | Edited on 21/11/2022

 

Tamil Nadu government rehabilitated Maoist

 

மாவோயிஸ்ட் இயக்கமானது, கடந்த 2009 ஆம் ஆண்டு இந்திய அரசால் தீவிரவாத இயக்கமாக அறிவிக்கப்பட்டு, நாடு முழுவதும் தடை செய்யப்பட்டது. அந்த சமயத்தில், மாவோயிஸ்ட் இயக்கத்தின் மாநில குழு உறுப்பினராக இருந்தவர்தான், கர்நாடக மாநிலம் ஷிவமோகா நகரை சேர்ந்த சந்தியா என்கிற பிரபா. இவரது கணவர் பி.ஜி.கிருஷ்ணமூர்த்தி, மாவோயிஸ்ட்டுகளின் முக்கிய தளபதிகளில் ஒருவராக இருந்தார்.

 

வடகிழக்கு மாநிலங்களில் மாவோயிஸ்ட் அமைப்புகள், கூண்டோடு ஒடுக்கி வந்த நேரத்தில் தென் மாநிலங்களை குறிவைத்து  மாவோயிஸ்ட்டுகள் களமிறங்கினர். அப்போது சந்தியாவும், பி ஜி கிருஷ்ணமூர்த்தியும் கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் மாவோயிஸ்ட் இயக்கத்துக்காக பல்வேறு தலைமறைவு பணிகளை மேற்கொண்டு வந்தனர். இதனால், கர்நாடக, கேரள மாநிலங்களில்  கிருஷ்ணமூர்த்தி மீது 20க்கும் மேற்பட்ட வழக்குகளும், சந்தியா மீது 40க்கும் மேற்பட்ட வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன. மேலும், இவர்களின் தலைக்கு விலை வைத்து, தேடப்படும் மாவோயிஸ்ட் என அறிவிக்கப்பட்டது.

 

இந்நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில், கிருஷ்ணமூர்த்தியை, கேரள போலீசார் கைது செய்தனர். அப்போது, போலீசில் சிக்காமல் இருந்த சந்தியா, தன்னை சுட்டுக்கொன்று விடுவார்கள் என பயந்து அடுத்த ஒரு சில நாட்களில் திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி. பாலகிருஷ்ணன் முன்னிலையில் தமிழக போலீசாரிடம் சரணடைந்தார். பின்னர், மனம் திருந்தி வாழ வேண்டும் என கருதிய சந்தியாவை வேலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பாதுகாப்பு இல்லத்தில் தங்க வைத்தனர். மேலும், பக்கவாதம் மற்றும் மூச்சுத்திணறல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த சந்தியாவுக்கு தொடர் மருத்துவ சிகிச்சையும் அளிக்கப்பட்டது.

 

Tamil Nadu government rehabilitated Maoist

 

இதையடுத்து, சந்தியா மனம் திருந்தியதால், அவரின் மறுவாழ்விற்காக தமிழக அரசு வேலூர் மாவட்டம் அரியூர்  பகுதியில் ஆவின் பாலகம் அமைத்துக் கொடுக்க முடிவு செய்தது. அதற்கான பணிகளை விரைந்து செய்தனர். ஆவின் பூத் தயாரானதும் கடந்த நவம்பர் 19 ஆம் தேதியன்று, வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், ஆவின் பாலகத்தை திறந்து வைத்தார். 

 

அப்போது ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் பேசும்போது, "கடந்தாண்டு சரணடைந்த மாவோயிஸ்ட் இயக்கத்தை சேர்ந்த சந்தியாவுக்கு, தமிழக அரசின் சரணடைதல் மற்றும் மறுவாழ்வு திட்டத்தின் கீழ் ரூபாய் ஒரு லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் ஆவின் பாலகம் அமைத்து தரப்பட்டுள்ளது. அவரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளும் கிடைக்க  நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழக கியூ பிரிவு  எஸ்.பி. கண்ணம்மாள்,  திருப்பத்தூர் எஸ்.பி. பாலகிருஷ்ணன், உள்ளிட்ட  அரசு உயரதிகாரிகளும் பங்கேற்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்