இந்தியாவில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயுவின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. இதனால் சாமானிய மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று நிர்மலா சீதாராமன் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 8 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு 7 ரூபாயும் குறைக்கப்படுவதாகவும், இதனால் பெட்ரோல் லிட்டருக்கு 9.5 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 7 ரூபாயும் குறையும் என்று அறிவித்தார். மேலும் மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தில் ஒவ்வொரு கேஸ் சிலிண்டருக்கும் ரூபாய் 200 மானியம் வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பாக அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் வரவேற்பு தெரிவித்திருந்த நிலையில் தமிழக அரசு தன் பங்கிற்கு விலை குறைப்பு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கிடையே தமிழக நிதியமைச்சர் இதுதொடர்பான கேள்விக்கு பதிலளித்த போது, " மத்திய அரசு ஏற்கனவே உயர்த்திய விலையில் ஐம்பது சதவீதம் தற்போது குறைத்துள்ளது. அவர்கள்தான் இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார். இந்நிலையில் இபிஎஸ் இதுதொடர்பாக பேசும்போது, " மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைத்துள்ளது. மாநில வரியில் பெட்ரோலுக்கு ரூ.10, டீசலுக்கு 9 ரூபாயை குறைக்க வேண்டும். மக்கள் பிரச்னையை உணர்ந்து தேர்தல் அறிக்கையில் கூறியதை திமுக செய்ய வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.