தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ். அழகிரி சிதம்பரத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது, எனது 50 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் தேர்தல் ஆணையம் ஒரு சார்பாக நடந்ததை கண்டதில்லை. கரூர் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஜோதிமணி மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுக்கிறார். அதற்கு அவர் அரசியல்வாதி போல் நடந்துகொள்கிறார். மாவட்ட ஆட்சியர் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும். இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் மாவட்ட ஆட்சியரை உடனடியாக தேர்தல் ஆணையம் மாற்ற வேண்டும் .
![a](http://image.nakkheeran.in/cdn/farfuture/iKYZB5GoEvbMtJwzk4yd_zrSDUfvhgm9fE7xIIvngiw/1555524520/sites/default/files/inline-images/allm.jpg)
காவல்துறை , வருமான வரித்துறை, தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக ஒரு சார்பாக செயல்படுகிறது . ஜனநாயக மரபை மோடி மறந்து செயல்படுகிறார். தூத்துக்குடியில் கனிமொழி மீது தவறான எண்ணத்தை உருவாக்க அவரது வீட்டில் ரெய்டு நடத்தி மிரட்டியுள்ளனர். 70 ஆண்டுகளாக ஜனநாயகத்தை அழிக்கும் வேலையை பாரதிய ஜனதா கட்சியும், அதிமுகவும் செய்து வருகிறது.
எல்லா தொகுதியிலும் பணம் பட்டுவாடா நடந்து வருகிறது தேனியில் பணம் ஆறாக ஓடுகிறது, மக்கள் பணத்தின் மீது நடந்து செல்கிறார்கள். அங்கு தேர்தலை நிறுத்தாமல் வேலூரில் மட்டும் நிறுத்தியுள்ளனர். கரூரில் தேர்தலை நிறுத்த அனைத்து வேலைகளும் செய்து வருகிறார்கள். வருமானவரி துறையினருக்கு யாரிடம் பணம் உள்ளது என்று தெரியும் அவர்களை விடுத்து எதிர்க்கட்சியினரை மிரட்டும் தோணியில் சோதனை செய்து வருகிறார்கள்.
ஒருவரை பணிய வைப்பதற்காக எப்ஐஆர் போடுகிறார்கள். அதன் பிறகு அதனை தூக்கி எரிகிறார்கள். ராகுல் காந்தி என்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது தமிழகத்தில் தேர்தல் நடைபெறுமா என்ற ஐயம் உள்ளதை அவரிடம் கூறினேன். கடலோர மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சி வாக்குச்சாவடிகளை கைப்பற்றும் என்று பொன். ராதாகிருஷ்ணன் கூறியதற்கு அவ்வளவு செல்வாக்கு இருந்தால் 40 தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றி பெறும் என்றார். காங்கிரஸ் அடிமை கட்சி என்று கூறும் மோடி இவர்கள் சுதந்திரத்திற்காக ஒரு துரும்பை கூட அசைக்கவில்லை.
காங்கிரஸ் கட்சியில் இருந்தவர்கள் போராடி சிறையிலே இறந்த வரலாறு உண்டு. பிஜேபி அடிமையினால் வளர்ந்த கட்சி, மாநில பட்டியலில் கல்வியை கொண்டுவரப்படும், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மாநில அரசு விரும்பினால் நிறைவேற்றுவோம், இந்த தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி மத்தியில் ஆட்சி அமைக்கும் அளவில் வெற்றி பெறும் என்றார். இவருடன் காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் சித்தார்தன், கட்சியின் அகிலஇந்திய செயற்குழு உறுப்பினர் மனிரத்தினம் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.