தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, 'என் மண்; என் மக்கள்’ என்ற பெயரில் இன்று இராமேஸ்வரத்திலிருந்து ஊழலுக்கு எதிரான நடைப்பயணத்தைத் துவங்க இருக்கிறார். இந்த நடைப்பயணத்தை இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைக்க உள்ளார். அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்ற நிலையில் நிகழ்ச்சியானது துவங்கியது.
தொடர்ந்து நிகழ்வில் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா, ''தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற கூட்டணிக் கட்சி நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம். தமிழில் பேச முடியாததற்கும் மன்னியுங்கள். ராமேஸ்வரம் பூமி இந்தியாவின், இந்து மதத்தின் சின்னமாக விளங்குகிறது. என் மண்; என் மக்கள் நடைப்பயணம் இந்திய நாட்டில் 130 கோடி மக்களின் மனதில் ஒரு மரியாதையை ஏற்படுத்துவதற்காக நடத்தப்படுகின்ற ஒரு நடைப்பயணம். இது அரசியல் சார்ந்ததல்ல. தமிழகக் கலாச்சாரத்தை நாடு முழுவதும் கொண்டு செல்லும் நடைப்பயணம். தமிழ்நாட்டை ஊழலிலிருந்து விடுவிக்க நடத்தப்படும் நடைப்பயணம். ஊழல்வாதிகளை ஒழித்து ஏழை மக்களின் நலத்தைப் பேணும் அரசை உருவாக்கும் நடைப்பயணம். இந்த நடைப்பயணம் தமிழ்நாட்டின் சட்ட ஒழுங்கை சீர்படுத்தும் நடவடிக்கை. தமிழ்நாட்டின் ஒவ்வொரு தொகுதியிலும் பிரதமரின் செய்தியைக் கொண்டு செல்லப்போகிறார் அண்ணாமலை'' என்றார்.
தொடர்ந்து பேசிய அமித்ஷா, “இந்த ஆட்சி ஊழல் புரிபவர்களின் ஆட்சி. குற்றம் புரிபவர்களின் ஆட்சி. இந்த அரசு மின் பகிர்மான கழகத்தில் ஊழல் புரிந்த அரசு. ஏழை மக்களுக்கு விரோதமான அரசு. அவர்கள் செய்த பல கோடி ரூபாய் ஊழல் தமிழக மக்கள் முன் வெளியே வந்திருக்கிறது. காங்கிரஸ் கூட்டணி நாட்டை வலுப்படுத்த நினைக்கவில்லை. தங்கள் வாரிசுகளை முன்னேற்ற நினைக்கிறார்கள். நாட்டிலேயே ஊழல் மிகுந்த அரசாக திமுக உள்ளது.
அந்த அரசில் அங்கம் வகிக்கும் அமைச்சர் ஒருவர் கூட கைதாகி உள்ளார். கைதாகி சிறையில் உள்ள நிலையிலும் அவர் அமைச்சராக இருப்பது ஏன்? செந்தில் பாலாஜியின் ராஜினாமாவை முதல்வர் ஸ்டாலின் ஏற்றால் எல்லா ரகசியமும் வெளியே வந்துவிடும். காங்கிரஸ், திமுக என்றாலே நிலக்கரி, 2ஜி ஊழல் போன்ற ஊழல்கள் தான் நினைவுக்கு வரும். பிரதமர் மோடி கடந்த 9 ஆண்டுகளாக ஊழல்கள், குடும்ப ஆட்சிக்கு எதிராகச் செயல்பட்டு வருகிறார். பயங்கரவாதத்தை ஒடுக்க சர்ஜிகல் விமானப்படை தாக்குதல்களைப் பிரதமர் மோடி நடத்தினார். மீனவர்களின் பிரச்சனைக்கும் முந்தைய காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசுதான் காரணம். காங்கிரஸ் கூட்டணிதான் இலங்கைத் தமிழர்களின் மரணத்திற்குக் காரணமாக இருந்தது. பாஜக தமிழகத் தலைவர் அண்ணாமலை ஒரு ட்வீட் பதிவிட்டாலே ஆட்சிக்கு ஆட்டம் ஏற்படும்'' என்றார்.