18வது மக்களவைத் தேர்தல் இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாநிலமாக 7 கட்டங்களாக நடைபெற்ற நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி வருகின்றன. மாலை 4 மணியளவிலான நிலவரப்படி மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 293 தொகுதிகளில் பாஜக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. இந்தியா கூட்டணி 233 இடங்களிலும், மற்றவை 17 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது.
அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் திமுக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. திமுக கூட்டணி அணைத்து இடங்களிலும் முன்னிலை வகித்து வருவதால் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் திமுகவினர் பட்டாசு வெடித்து, இனிப்புகளைப் பகிர்ந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதாவது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. முன்னதாக தருமபுரி, விருதுநகரில் கடும் இழுபறி நீடித்த நிலையில், திமுக கூட்டணி தற்போது முன்னிலை வகித்து வருகிறது.
இதனையடுத்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் மாலை 5 மணிக்கு திமுகவின் முக்கிய நிர்வாகிகளோடு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம் இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்ல உள்ளதாகவும் கூறப்படுகிறது.