
நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் நேற்று 08/12/2021 பிற்பகல் விபத்தில் சிக்கி கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் பிபின் ராவத்தோடு பயணித்த அவரது மனைவி மதுலிகா ராவத், 11 இராணுவ அதிகாரிகளும் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் இந்திய விமானப் படை சார்பில் அறிவிக்கப்பட்டது. நாட்டையே சோகத்திற்குள்ளாக்கியுள்ளது இந்த துயர நிகழ்வு.

அஞ்சலி நிகழ்வுக்காக 13 பேரின் உடலும் ராணுவ வாகனத்தில் கொண்டுசெல்லபட்டு தற்பொழுது அஞ்சலி செலுத்தும் நிகழ்வு வெலிங்டன் சதுக்கத்தில் உள்ள ராணுவ பயிற்சி மையத்தில் நடைபெற்று வருகிறது. அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் முன்னதாக தமிழக அரசு சார்பாக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் தமிழக காவல்துறை உயர் அதிகாரிகள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். அதனைத்தொடர்ந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ராணுவ பயிற்சி மையத்திற்கு வருகை தந்து 13 பேரின் உடல்களுக்கும் அஞ்சலி செலுத்தினார். அப்பொழுது முதல்வர் மு.க.ஸ்டாலின் கருப்பு துண்டு அணிந்திருந்தார்.