Skip to main content

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

Published on 03/03/2022 | Edited on 03/03/2022

 

Tamil Nadu Chief Minister MK Stalin's letter to the Union Foreign Minister!

 

உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களை அழைத்து வர மத்திய அரசு தேவையான அனுமதி தர வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 

 

இது தொடர்பாக தமிழக அரசு இன்று (03/03/2022) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "உக்ரைன் நாட்டில் சிக்கித் தவிக்கும் தமிழக மாணவர்களைப் பாதுகாப்பாகவும், விரைவாகவும் அழைத்து வருவதற்கு மத்திய வெளியுறவு அமைச்சகம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று கோரி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ் ஜெய்சங்கருக்கு இன்று (03/03/2022) கடிதம் எழுதியுள்ளார்.

 

முதலமைச்சர் எழுதியுள்ள கடிதத்தில், கடந்த 28/02/2022 அன்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருடன் தான் தொலைபேசியில் உரையாடியதை நினைவு கூறுவதாகவும். உக்ரைனில் உள்ள தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களை மீட்டு அழைத்துவரும் பணிகளை ஒருங்கிணைக்க, பிரத்யேகமாக ஒருங்கிணைப்பு அலுவலர் ஒருவரை நியமிக்க வேண்டுமென்ற தமிழக அரசின் கோரிக்கை மீது விரைந்து நடவடிக்கை மேற்கொண்டமைக்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். தமிழக அரசால் நிறுவப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை மூலம் உக்ரைனில் சிக்கித் தவிக்கும் மாணவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருடன் தமிழக அரசு தொடர்பில் உள்ளதாகவும். இதுவரை, 2,223 மாணவர்களை விரைவாக அங்கிருந்து அழைத்து வருவதற்கு ஏதுவாக, அவர்களின் விவரங்கள் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் மற்றும் உக்ரைனில் உள்ள இந்தியத் தூதரகத்துடன் பகிரப்பட்டுள்ளன என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்டு அழைத்து வருவதில் இந்திய அரசு மேற்கொண்டுள்ள முயற்சிகளைப் பாராட்டும், அதேவேளையில் இதுவரை தமிழகத்தைச் சேர்ந்த சுமார் 193 மாணவர்கள் மட்டுமே தாய்நாடு திரும்பிட வசதி செய்து தரப்பட்டுள்ளது என்பதைக் குறிப்பிட்டுள்ள தமிழக முதலமைச்சர், உக்ரைனிலிருந்து அழைத்து வரப்படும் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தனிக் கவனம் செலுத்திட வேண்டுமென்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சரைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

 

மேலும், நிலைமை மோசமாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள உக்ரைனின் கிழக்கு எல்லையில் உள்ள கார்கிவ் மற்றும் சுமி போன்ற இடங்களில் சிக்கித் தவிக்கும் பெரும்பாலான மாணவர்கள். பதுங்கு குழிகள் மற்றும் மெட்ரோ நிலையங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர் என்றும் மோசமான மற்றும் நிச்சயமற்ற நிலைமைகளை அவர்கள் எதிர்கொள்கின்றனர் என்றும் இந்த நிலைமை தொடர்ந்தால் அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் தண்ணீர் கிடைக்காமல் போகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் இதனை ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டுவருவதாகவும் தெரிவித்துள்ளார். எனவே, ரஷ்ய எல்லைகள் வழியாக மாணவர்களை அழைத்து வருவதற்கான மாற்று ஏற்பாடுகள் குறித்து ஆராயப்படலாம் என்று கேட்டுக் கொண்டுள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இந்தப் பிரச்சினையை ரஷ்யாவின் உரிய கவனத்திற்கு அவசரமாக எடுத்துச் செல்ல வேண்டுமென்றும் தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

 

ருமேனியா, போலந்து, ஹங்கேரி மற்றும் ஸ்லோவாகியாவிற்கு 1,000- க்கும் மேற்பட்ட தமிழக மாணவர்கள் உக்ரைனிலிருந்து வந்து இந்தியாவிற்குத் திரும்பக் காத்திருக்கிறார்கள் என்பதைத் தெரிவித்துள்ள முதலமைச்சர், அந்த மாணவர்கள் பாதுகாப்பாகவும், விரைவாகவும் திரும்புவதை உறுதி செய்திட ஏதுவாக, நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருச்சி சிவா, டாக்டர் கலாநிதி வீராசாமி, எம்.எம்.அப்துல்லா மற்றும் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் டி.ஆர்.பி. ராஜா ஆகியோரை, நான்கு இந்திய ஆட்சிப் பணி அலுவலர்களுடன் மேற்படி நாடுகளுக்கு அனுப்பி அங்குள்ள இந்தியத் தூதரகங்களுடன் இணைந்து பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகவும் இதற்குத் தேவையான அனுமதிகளை மத்திய வெளியுறவு அமைச்சகம் விரைவாக வேண்டுமென்றும் தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்." இவ்வாறு அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

சார்ந்த செய்திகள்