அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிர்வாகியின் சொந்த ஓட்டுக்கட்டிடத்தில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியான சம்பவம் தஞ்சை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை உருவாக்கி இருக்கிறது.
நாகை மாவட்டம் மணல்மேடு அருகே உள்ள களத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன். வெல்டிங் தொழில் செய்து வந்தார். இவர் ஒரு வாரத்திற்கு முன்பு தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் ஒன்றிய செயலாளர் பொன்.த. மனோகரனின் சொந்த ஊரான நெய்வாசலில் உள்ள பாழடைந்த ஓட்டு கட்டடத்தில் உள்ள சிறு அறையை வாடகைக்கு எடுத்து வெல்டிங் தொழில் செய்து வந்திருக்கிறார். இந்த நிலையில் 18 ஆம் தேதி மாலை கடையைத்திறக்கும் போது ஷட்டரில் பாய்ந்திருந்த மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து பந்தநல்லூர் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து, உடற்கூறாய்வுக்காக ஜெயராமனின் உடலை திருப்பனந்தாள் மருத்துவமனைக்கு அனுப்பினர். அவரது உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு, பாதுகாப்பற்ற நிலையில் இருக்கும் கட்டிடடத்தை வாடகைக்குவிட்ட உரிமையாளர் மீதும், தகுதியற்ற கட்டிடத்திற்கு மின் இனைப்பு வழங்கிய மின்சாரத்துறையினர் மீதும் வழக்கு தொடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டு உடலை வாங்க மறுத்தனர்.
பிறகு திருவிடைமருதூர் டி,எஸ்,பி பாதிக்கப்பட்டவர்களிடம், பேச்சுவார்த்தை நடத்தி, சம்பவ இடத்தை ஆய்வு செய்து வழக்கு பதியப்படும் என கூறினார். இதையடுத்து உடலை வாங்கிச்சென்றனர்.
இதுகுறித்து ஜெயராமனின் உறவினர்களிடம் விசாரித்தோம்," மனோகரன் தனது சொந்த ஊரான நெய்வாசல் மெயின் ரோட்டில் சேர்மனாக இருக்கும்போது வரிசையா கடை கட்டி வைத்திருக்கிறார். அதில் ஓட்டுக்கட்டிடங்களும் இருக்கு. அந்த ஓட்டுக்கட்டிடத்தில் கடைசியாக உள்ள கடையை கடந்த வாரம் வாடகைக்கு எடுத்து வெல்டிங் ஒர்க் செய்ய ஏற்பாடு செய்திருந்தார் ஜெயராமன். அந்த கடைக்கு கதவு இல்லாமல் போனதால் பக்கத்தில் உள்ள ரீவைண்டிங் கடையில் வெல்டிங்கிற்கான பொருட்களை வைத்திருந்தார்.
18 ம் தேதி வேலைக்கு ஜாமான்களை எடுக்க ரீவைண்டிங் கடையின் ஷெட்டரை திறந்தபோது, அதில் பாய்ந்த மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார். கட்டிட உரிமையாளரான மனோகரனோ அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி ரீவைண்டிங் கடைக்காரர் மீது பழியை போடுகிறார். ஆனால் மின் கசிவு ஏற்பட்டதற்கான காரணமோ, பாதுகாப்பற்ற நிலையில் அடுத்தடுத்த கட்டிடங்களுக்கு போகும் ஒயரில் தேய்வு ஏற்பட்டே நடந்துள்ளது. இதனை மறைக்க அவர் ரீவைண்டிங் கடைக்காரர் மீது வைக்கிறார். நீதிமன்றம் வாயிலாகவும், அவர் சார்ந்துள்ள கட்சியின் தலைவரை சந்தித்தும் நியாயம் கேட்போம்," என்கிறார்.
பொன்.த.மனோகரன் நாடாளுமன்ற தேர்தலின் போது அமமுகவின் சார்பில் மயிலாடுதுறை தொகுதியின் வேட்பாளருக்கு வழங்கப்பட்ட பணத்தை அப்படியே ஆட்டைய போட்டுவிட்டார் என அக்கட்சியினர் கட்சியின் மேல் இடத்திற்கு புகார் வாசித்துவிட்டு கடுப்பில் இருக்கின்றனர்.
அக்கட்சிக்காரர்களிடம் விசாரித்தோம், " அதிமுகவில் இருக்கும்போது ஆரம்பத்தில் தஞ்சாவூர் தங்கமுத்துவின் ஆதரவாளராக இருந்தார். பிறகு அவரை ஏமாற்றிவிட்டு மாவட்ட செயலாளராக மாறி 6 மாதத்தில் 6 கோடியை சம்பாதித்தவர் என பொறுப்பிலிருந்து ஜெயலலிதாவால் நீக்கப்பட்டார். பிறகு மன்னார்குடி திவாகரனோடு தொடர்பு ஏற்படுத்திக்கொண்டு தனது மகன்களின் திருமணத்தை டாக்டர் வெங்கடேஷ்,திவாகரனை அழைத்துவந்து நடத்தி தனக்கு சசிகலா குடும்பத்தோடு ஆதரவு இருப்பதாக காட்டிக்கொண்டார்.
இந்த நிலையில் அதிமுக அமமுக பிரியும்போது அதிமுகவில் தஞ்சை மாவட்ட செயலாளர் பொறுப்பு கேட்டார் கிடைக்காத பட்சத்தில் அமமுகவிற்கு தாவி ஒன்றிய செயலாளராக மாறினார்.
இதற்கு இடையில் அதிமுகவில் இருக்கும்போது திருப்பனந்தாள் ஒன்றிய சேர்மனாக இருக்கும்போது பல்வேறு முறைகேடுகளை செய்து கோடிகளை குவித்தார். திருமங்கைச்சேரி கூட்டுறவு கடன் சங்கத்தில் தலைவாராக இருந்துகொண்டு பல லட்சம் சுறுட்டினார். தலித் சமுகத்தவருக்கு வழங்கக்கூடி தாட்கோ கடனைக்கூட விட்டுவைக்காமல் அவரது வீட்டில் வேலைப்பார்பவர்கள் பெயரில் வாங்கியிருக்கிறார். இவரால் கட்சிக்கோ, கட்சிக்காரர்களுக்கோ எந்தப்புண்ணியமும் கிடையாது. ஏழைகளுக்கு வழங்கப்படும் கான்கிரீட் வீடுகள், பசுமை வீடுகள் பத்துக்கும் அதிகமாக கட்டி அதை வாடகைக்கு விட்டு சம்பாதிக்கிறார்.
அதேபோல் அணைக்கரை பாலத்தில் பழுது பார்த்த போது அங்கு கிடைத்த ஓடுகளை கொண்டு வந்து வரிசையாக கடைகளை கட்டி வாடகைக்கு விட்டிருக்கிறார், அதற்கு வயரிங் தரமாக செய்யாமல் காசுக்காக கடமைக்கு செய்து இப்படி ஒரு உயிரை காவுவாங்கி விட்டு தப்பிக்க அப்பாவி மீது பழியைப்போடுகிறார். தினசரி மணல் கொள்ளையில் ஒரு நாள் லாபத்தை அந்த குடும்பத்திற்கு கொடுத்தாலே புன்னியமாகியிருக்கும், அதைகூட செய்யாமல் அட்சியம் செய்கிறார். சம்பவம் நடந்த இடத்தை ஆய்வு செய்தாலே இவர் மாட்டிக்கொள்வார். காக்கிகள் அதில் ஆர்வம் காட்ட வேண்டும்."என்கிறார் ஆதங்கமாக.