தமிழர் திருநாளான பொங்கல் திருநாள் நாளை (15-01-2024) தமிழகம் முழுவதும் கொண்டாடப்படவுள்ளது. அதனைத் தொடர்ந்து மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் கொண்டாடப்பட உள்ளது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் எனப் பலரும் பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ‘மக்கள் பொங்கல்! மகிழ்ச்சி பொங்கல்!’ என்ற தலைப்பில் 3 நிமிடம் 13 நொடிகள் கால அளவு கொண்ட வீடியோ வடிவில் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த வாழ்த்துச் செய்தியில், “பொங்கலோ பொங்கல், பொங்கலோ பொங்கல், பொங்கலோ பொங்கல். தாய் தமிழ்நாட்டு மக்கள் எல்லோருக்கும் என் இனிய தமிழர் திருநாள் பொங்கல் நல் வாழ்த்துகள்.
ஆண்டுக்கோர் நாள் அருமைமிகு திருநாள் பொங்கல் புதுநாள் நமக்கென்று உள்ள ஒப்பற்ற விழா. இதற்கு ஒப்பான விழா உலகில் எங்கும் இல்லை என்று சொன்னார் பேரறிஞர் அண்ணா. களம் காண்பான் வீரன் என்றால், நெற்களம் காண்பான் உழவன் மகன். போர் மீது செல்லுதலே வீரன் வேலை வைக்கோற் போர் மீது உறங்குதலே உழவன் வேலை. பகைவர் முடி பறித்தல் வீரன் நோக்கம் - நாற்று முடி பறித்தல் உழவன் நோக்கம் உழவனுக்கும் வீரனுக்கும் ஒற்றுமைகள் பல உண்டு. வேற்றுமையோ ஒன்றே ஒன்று உழவன் வாழ வைப்பான். வீரன் சாக வைப்பான் என்று எழுதினார் கலைஞர். உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின் செல்பவர். இது வள்ளுவர் வாக்கு. உழவு என்பது தமிழர்களின் தொழிலாக மட்டும் அல்ல பண்பாட்டு மரபு. அதனால் தான் தமிழர்கள் பல்லாயிரம் ஆண்டுகளாக பொங்கல் திருவிழாவை கொண்டாடிட்டு இருக்கிறோம். தை முதல் நாள் உழைப்பின் திருநாளாக தமிழர் பெருநாளாகக் கொண்டாடிட்டு இருக்கிறோம்.
கடந்த மூன்று ஆண்டுகளாக கூடுதல் மகிழ்ச்சிக்குரியதாக தமிழ்நாட்டில் திமுகவின் தனிப்பெரும் ஆட்சி நடைபெற்று வருகிறது. பொங்கல் திருநாள் மட்டுமல்ல எல்லா நாளும் மகிழ்ச்சிக்குரிய நாளே என்று சொல்லத்தக்க வகையில் திராவிட மாடல் ஆட்சி நடைபெற்று வருகிறது. தேர்தலுக்கு முன்பு கொடுத்த பல வாக்குறுதிகள் நிறைவேற்றியும் சொல்லாத பல திட்டங்களைச் செய்து காட்டியும் சாதனைகளின் பேரரசாக திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது. மகளிருக்கு விடியல் பயணம் முதல் கொரோனா காலத்தில் அனைத்து குடும்பத்திற்கும் 4000 ரூபாய். வெள்ள நிவாரணமாக 6000 ரூபாய். கல்லூரி மாணவிகளுக்கு புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் ஆயிரம் ரூபாய். எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாக செப்டம்பர் மாதம் முதல் ஒரு கோடிக்கும் மேல் மகளிர்க்கு 1000 ரூபாய் வழங்குகிறோம்.
பெரும் நிதிநெருக்கடிக்கு இடையில் பொங்கல் தொகுப்புடன் பரிசுத் தொகையாக ஆயிரம் ரூபாய் வழங்கி கோடிக்கணக்கான மக்கள் மனதில் மகிழ்ச்சியை பொங்க வைத்துள்ளது தமிழக அரசு. பால் பொங்குவதைப் போல கோடிக்கணக்கான மக்களின் மனங்களில் மகிழ்ச்சி பொங்கி வருவதை நான் காண்கிறேன். உங்கள் மகிழ்ச்சி தான் என் மகிழ்ச்சி. உங்களது மனங்களில் ஏற்படும் சிரிப்பு தான் என்னுடைய பூரிப்பு என் பேரன்பிற்குரிய தமிழினத்தின் உடன்பிறப்புகளே அன்பு பொங்க, ஆசை பொங்க, இன்பம் பொங்க, ஈகை பொங்க, உண்மை பொங்க, ஊரே பொங்கட்டும். இனிய பொங்கல் இந்தியாவின் பொங்கலாக மாறப் போகும் ஆண்டு இது. அனைவர்க்கும் என் இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள். பொங்கலோ பொங்கல் பொங்கலோ பொங்கல் பொங்கலோ பொங்கல்” எனத் தெரிவித்துள்ளார்.