
அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டிசம்பர் 11ஆம் தேதி சேலம் வருகிறார்.
சேலம் மத்திய, கிழக்கு, மேற்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் அவசர செயற்குழுக் கூட்டம் சேலத்தில் ஞாயிற்றுக்கிழமை (05.12.2021) நடந்தது. தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு தலைமையில் இக்கூட்டம் நடந்தது.

சேலம் மத்திய மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர் எஸ்.ஆர். சிவலிங்கம், மேற்கு மாவட்ட பொறுப்பாளர் டி.எம். செல்வகணபதி, எஸ்.ஆர். பார்த்திபன் எம்.பி., ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் அமைச்சர் கே.என். நேரு பேசியதாவது, "திமுக ஆளுங்கட்சியாக இருக்கிறது. அதிமுக எதிர்க்கட்சியாக உள்ளது. நமக்கும் அவர்களுக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டி இருக்கும். கடந்த பத்து ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் இருந்ததால் வசதியாக இருக்கிறார்கள்.
ஆனால் நாம் மக்களுக்காக உழைத்திருக்கிறோம். அவர்களிடம் பணம் மட்டும்தான் அதிகமாக இருக்கிறது. மற்றபடி, திமுகவைவிட வேறு எந்த தகுதியும் அக்கட்சியிடம் இல்லை.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியைத் தர வேண்டும். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஒரேநாளில் நடக்கும். அதுபற்றி முதல்வர் மு.க. ஸ்டாலின் முடிவு செய்வார். இந்தத் தேர்தல் அட்டவணையை விரைவில் மாநில தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வரும் டிசம்பர் 11ஆம் தேதி சேலத்திற்கு வருகை தர இருக்கிறார். மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் சென்று மக்களிடமிருந்து 46 ஆயிரம் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டுள்ளன.
அந்த மனுக்களிலிருந்து 26 ஆயிரம் பேருக்கு சேலத்தில் நடக்கும் விழாவில் முதலமைச்சர் நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். கொண்டலாம்பட்டி ரவுண்டானாவிலிருந்து நிகழ்ச்சி நடக்கும் திடல்வரை கட்சியினர் திரண்டு முதலமைச்சருக்கு சிறப்பான வரவேற்பை அளிக்க வேண்டும்.” இவ்வாறு அமைச்சர் கே.என்.நேரு பேசினார்.
இக்கூட்டத்தில், மத்திய மாவட்ட அவைத்தலைவர் கலையமுதன், மேற்கு மாவட்ட அவைத்தலைவர் கோபால், மத்திய மாவட்ட பொருளாளர் சுபாஷ், மாநகரச் செயலாளர் ஜெயக்குமார், மாநில தீர்மானக்குழு உறுப்பினர் தாமரைக்கண்ணன், தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச்செயலாளர் மருத்துவர் தருண், பகுதிச் செயலாளர்கள் சக்கரை சரவணன், சாந்தமூர்த்தி, மணமேடு முருகன், முன்னாள் கவுன்சிலர் அசோக் டெக்ஸ் அசோகன், ஒன்றியச் செயலாளர்கள் பாரப்பட்டி சுரேஷ்குமார், வெண்ணிலா சேகர், வீரபாண்டி பிரபு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஏற்கனவே கடந்த நவம்பர் 29ஆம் தேதி சேலத்திற்கு வருவதாக இருந்தது. ஆனால் தொடர் மழை, புயல் எச்சரிக்கை காரணமாக அப்போதைய வருகை திடீரென்று ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.