ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும் தற்போதைய குப்பம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தெலுங்கு தேச கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு, அவரது ஆட்சிக் காலத்தில் ஆந்திர மாநில இளைஞர் மேம்பாட்டுத் துறையில் சுமார் 370 கோடி வரை ஊழல் செய்ததாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில் நேற்று இரவு அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சந்திரபாபு நாயுடுவின் கைதை கண்டித்து அவரது ஆதரவாளர்களும் தெலுங்கு தேச கட்சியின் தொண்டர்களும் ஆந்திர மாநிலத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம் மற்றும் மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். சில இடங்களில் பேருந்துகள் தாக்கப்பட்டுள்ளது.
இதனால் தமிழக எல்லையோரங்களிலும் பதற்றம் நிலவுவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆந்திர மாநிலத்தை ஒட்டியுள்ள வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டத்தில் இருந்து ஆந்திராவுக்கு இயக்கப்படும் தமிழக மற்றும் ஆந்திர பேருந்துகள் அனைத்தும் அந்தந்த பேருந்து நிலையத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதேபோல ஆந்திராவிலிருந்து தமிழகம் வரும் அனைத்து பேருந்துகளும் நிறுத்தப்பட்டு போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் இருந்து வேலூர் வழியாக ஆந்திர மாநிலத்துக்கு இயக்கப்படும் 40 தமிழக அரசுப் பேருந்துகள். 63 ஆந்திர மாநில அரசு பேருந்துகள். 27 தனியார் பேருந்துகள் எனத் தற்போதைக்கு மொத்தம் 130 பேருந்துகள் ஆந்திராவிற்கு இயக்கப்படவில்லை. பேருந்து போக்குவரத்து தடைப்பட்டதால் ஆந்திரா செல்லும் பயணிகள் மற்றும் தமிழகத்திற்குத் திரும்பும் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதற்கிடையில் ஒரு சில தனியார் பேருந்துகள் மட்டும் வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து சித்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை இயக்குவதாகத் தெரிவித்துள்ளனர்.