தமிழக சட்டப்பேரவையில் முதன்முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. தாக்கலாகும் இ-பட்ஜெட்டை, கணினித் திரை மூலம் எம்எல்ஏக்கள் அறிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கி செப்டம்பர் 21-ஆம் தேதி வரை நடைபெறும். தமிழக சட்டப்பேரவையில் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் 16ஆம் தேதி தொடங்குகிறது. 19ஆம் தேதி வரை நான்கு நாட்கள் நடைபெறும் பட்ஜெட் மீதான விவாதத்தில் கடைசி நாளில் பதிலுரை அளிக்கப்பட இருக்கிறது. அதேபோல் தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் ஆகஸ்ட் 23-ஆம் தேதி தொடங்குகிறது. காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு செப்டம்பர் 20 ஆம் தேதி முதல்வர் பதிலளிக்க இருக்கிறார்.
முதல்வரிடம் வாழ்த்துபெற்ற தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், சட்டப்பேரவை நடக்கும் கலைவாணர் அரங்கத்திற்கு வந்த பொழுது திமுக எம்.எல்ஏக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். தமிழக பட்ஜெட் தாக்கலுக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகை புரிந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள், எம்எல்ஏக்களும் கலைவாணர் அரங்கத்திற்கு வருகை புரிந்தனர். முதல் முறையாக தமிழகத்தில் இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கும் நிலையில் சட்டப்பேரவை சபாநாயர் அப்பாவு சட்டப்பேரவை அலுவல்களை கணினித் திரையில் படித்தார். அதனைத்தொடர்ந்து அதிமுக உறுப்பினர்கள் பேசவாய்ப்பளிக்கக் கோரி அமளியில் ஈடுபட்ட நிலையில், அமளிகளுக்கு இடையே பட்ஜெட்டை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் வாசிக்கத் துவங்கினார். ஆனால் சில நொடிகளிலேயே அதிமுக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.