நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் படுதோல்வி, தேர்தலுக்காக தலைமை கொடுத்த பண விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து பாஜகவில் விவாதிக்கப்பட்டு வருகின்றன. இதற்காக டெல்லி தலைமை தொகுதி வாரியாக தகவல்களை சேகரித்து வருகிறது.
இந்த நிலையில் தான் தமிழக பாஜக தலைவர் வரும் செப்டம்பர் மாதம் லண்டன் செல்ல திட்டமிட்டிருக்கிறார். ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் படிப்பதற்காக இந்த பயணம் என சொல்லப்படும் நிலையில், 5 மாதம் இந்தியாவில் இருக்கமாட்டார் என்றும், மீண்டும் அடுத்தாண்டு ஜனவரி மாத இறுதியில் தான் சென்னை திரும்ப திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த 5 மாதங்களில் தமிழக பாஜக தலைமையில்லாமல் இருக்குமா? அல்லது வேறு ஒரு புதிய தலைவர் நியமிக்கப்படுவாரா? என்கிற கேள்வி கட்சியின் மேல் மட்டத்தில் எழுந்திருக்கிறது.
அதேசமயம், தலைமையில்லாமல் இருக்கும் அந்த 5 மாதங்களும் பாஜகவை வழிநடத்த உயர்மட்ட ஒருங்கிணைப்பு குழு ஒன்று உருவாக்கப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது. இதற்கிடையே, ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தில் படிப்பதற்காக தலைவர் சென்றாலும், நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் கிடைத்த 500 ஸ்வீட்ஸ் பாக்ஸ்களை லண்டனில் பயன்படுத்தவும் இந்த படிப்பு பயணத்தில் திட்டமிட்டிருப்பதாகவும் தகவலறிந்த வட்டாரங்களில் பரவியுள்ளது.