Skip to main content

'ஜிலேபி... ஜிஎஸ்டி... விவகாரம்'-மன்னிப்பு தெரிவித்த தமிழக பாஜக

Published on 13/09/2024 | Edited on 13/09/2024
Tamil Nadu BJP apologized for 'jilebi.. GST... issue'

கோவை மாவட்டம் கொடிசியா வளாகத்தில் தொழில் அமைப்பினர் உடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பாஜக எம்.எல்.ஏ சீனிவாசன் மற்றும் பாஜகவின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்நாடு ஹோட்டல் உரிமையாளர்கள் சங்க தலைவரும், அன்னபூர்ணா உணவக உரிமையாளருமான சீனிவாசன், நிர்மலா சீதாராமனிடம் கோரிக்கையுடன் கேள்விகளை முன்வைத்தார்.

'உங்கள் பக்கத்தில் இருக்கிற எம்எல்ஏ (வானதி ஸ்ரீனிவாசனை குறிப்பிட்டு) எங்கள் ரெகுலர் அன்னபூர்ணா கஸ்டமர். வரும் போதெல்லாம் சண்டை போடுகிறார்கள். ஸ்வீட்டுக்கு 5% ஜிஎஸ்டி வைத்திருக்கிறீர்கள் இன்புட் கொடுக்கிறீர்கள். உணவுக்கு 5% ஜிஎஸ்டி வைத்திருக்கிறீர்கள் இன்புட் கிடையாது. காரத்திற்கு 12% வைத்திருக்கிறீர்கள். பேக்கரியில் உள்ள பிரட், பன்னை விட்டுவிட்டு மற்ற எல்லாவற்றுக்கும் 28% ஜிஎஸ்டி வைத்திருக்கிறீர்கள். இந்த அம்மா வர வேண்டியது ஜிலேபி சாப்பிட வேண்டியது. அடுத்தது காபி கொடுக்கணும். காரம் வேண்டும் என்பது. காரத்திற்கு 12 சதவிகிதம் ஜிஎஸ்டி என்று சொன்னால் உடனே சண்டைக்கு வருவது. இது டெய்லி எங்களுக்கு நடக்கிறது. ஒரே பில்லில் ஒரு ஃபேமிலிக்கு டிஃபரண்ட் டிஃபரண்டாக ஜிஎஸ்டி போட்டு கொடுப்பது கஷ்டமாக இருக்கிறது. பன்னுக்கு ஜிஎஸ்டி இல்லை. அதே நேரம் பன்னுக்குள்ள கிரீம் வைத்தால் 18 சதவீதம் ஜிஎஸ்டி கொடுக்க வேண்டும். கஸ்டமர் என்ன சொல்கிறார்கள் என்றால் 'கிரீமையும் ஜாமையும் கொண்டு வா நானே பன்னுக்குள் வைத்துக் கொள்கிறேன்' என்கிறார்கள். கடை நடத்த முடியல மேடம். அதனால் ஒன்றாக எல்லாவற்றுக்கும் ஒரே மாதிரி ஜிஎஸ்டி ஜாஸ்தி செஞ்சுருங்க'' என கொங்கு தமிழில் கோரிக்கை தெரிவித்திருந்தார். இதனை கேட்டு அரங்கம் சிரித்தது.

இந்த காட்சிகள் இணையத்தில் வைரலானது. ஜிஎஸ்டி வரிவிதிப்பு குறித்து பேசியதோடு எம்.எல்.ஏ தன் உணவகத்திற்கு வந்து ஜிலேபி சாப்பிட்டு விட்டு சண்டை போடுவது குறித்தும் ஹோட்டல் சங்க நிர்வாகி பேசியது சர்ச்சையை ஏற்படுத்த, இது குறித்து அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளர் மன்னிப்பு கேட்ட வீடியோவும் வெளியாகி இருந்தது. ஜிஎஸ்டி குறித்து கேள்வி எழுப்பியதற்காக உணவக உரிமையாளர் மிரட்டி மன்னிப்பு கேட்க வைக்கப்பட்டிருக்கிறார் என எதிர்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். திமுகவின் கனிமொழி, காங்கிரஸ் எம்பி ஜோதிமணி ஆகியோர் சமூக வலைத்தளங்கள் வாயிலாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Tamil Nadu BJP apologized for 'jilebi.. GST... issue'

தொடர்ந்து இதுகுறித்து விளக்கமளித்த பாஜக எம்.எல்.ஏ வானதி ஸ்ரீனிவாசன், ''நான் தவறாக பேசி விட்டேன் என்னை மன்னித்து விடுங்கள் நான் அமைச்சரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். நான் இப்பொழுதே வருகிறேன் மன்னிப்பு கேட்க டைம் கொடுங்கள் என்று அன்னபூர்ணா உணவக உரிமையாளர் கேட்டார்.

மதியம் உணவு இடைவேளைக்கு பிறகு பார்க்கலாம் என்று சொன்னோம். ஹோட்டலில் மதிய உணவு முடித்த பின்பு அவர் வந்தார். தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி விட்டேன். சோசியல் மீடியாவில் வேற மாதிரி போய்விட்டது என்றார். ஒரு வாடிக்கையாளர் உங்கள் கடையில் வந்து என்னென்னவெல்லாம் சாப்பிட்டார் என்று சொல்லலாமா? அது முறையா? உங்கள் ஹோட்டலுக்கு அடுத்தமுறை 10 பேர் சாப்பிட வந்தால் நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பீர்கள் என்று தோணாதா? என்று தான் அமைச்சர் கேள்வி எழுப்பினார். ஆனால் நாங்கள் மிரட்டி கொண்டு வந்து மன்னிப்பு கேட்க வைத்ததாக சொல்கிறார்கள். காங்கிரஸ், திமுகவில் ஒரு தொழிலதிபரை கூட்டிட்டு வந்து ஆணவத்தில், அதிகாரத்தில் மன்னிப்பு கேட்க வைப்பீர்களா? என்றெல்லாம் சொல்லி நிறைய விஷயங்கள் போய் கொண்டு இருக்கிறது. இதில் ஜாதியை வேற இழுக்கிறார்கள்'' என்றார். 

Tamil Nadu BJP apologized for 'jilebi.. GST... issue'

இந்நிலையில் சீதாராமனிடம் அன்னபூர்ணா உணவுவக நிர்வாகி மன்னிப்பு கேட்ட விவகாரத்தில் தனிப்பட்ட உரையாடல் குறித்த வீடியோவை பாஜக நிர்வாகிகள் வெளியிட்டதற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்வதாக பாஜகவின் மாநில தலைவர் மன்னிப்பு கேட்டுள்ளார். தனி உரிமை மீறலுக்காக ஹோட்டல் உரிமையாளர் சீனிவாசனிடம் வருத்தம் தெரிவித்தேன் என்றும் தமிழக பாஜக தலைமை தெரிவித்துள்ளது.

சார்ந்த செய்திகள்