சீனாவில் 2019ஆம் ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கரோனா தொற்று நோய் இந்தியாவில் முதல் முறையாக கேரளாவில் ஒருவருக்கு தொற்று கண்டறியப்பட்டது. தொடர்ந்து கரோனாவின் பரவல் அதிகரித்த நிலையில் கடந்த வருடம் மார்ச் 25 முதல் நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன் பின்னர் தொடர்ந்து பல மாதங்களாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது.
தற்போது கரோனாவின் இரண்டாம் அலையின் தாக்கம் கடுமையாக பரவி வருகிற நிலையில் சில மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமலில் உள்ளது. இந்நிலையில் கேரளாவில் கரோனா பரவல் அதிகரித்து இருக்கும் நிலையில் தேனி எல்லைப்பகுதியில் கரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கேரளாவில் நாளொன்றுக்கு கரோனா பாதிப்பு 25 ஆயிரத்தை கடந்து வரும் நிலையில் எல்லைப்பகுதியில் கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி கேரளாவில் இருந்து தேனி மாவட்டத்திற்குள் நுழைபவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்த பிறகே அனுமதி வழங்கப்படுகிறது. போடி மெட்டு, கம்பம் மெட்டு, குமுளி ஆகிய பகுதிகளில் சோதனைச் சாவடிகள் அமைத்துள்ள சுகாதரத்துறை அதிகாரிகள் பயணிகளின் விபரங்களை சேகரித்தும், கரோனா பரிசோதனையும் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பரிசோதனை முடிவுகள் வரும் வரை வீட்டு தனிமையில் இருக்க வேண்டும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். அதே போல் கேரளாவில் இ - பதிவு செய்துவிட்டு தமிழகத்திற்குள் நுழையும் பயணிகளுக்கு கரோனா பரிசோதனை கட்டாயம் என தெரிவித்துள்ளனர்.