நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி கீழே விழுந்து நொறுங்கியது. ஹெலிகாப்டரில் 14 பேர் பயணம் செய்த நிலையில், விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறியுள்ளதாக ஏ.என்.ஐ செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் இறந்தவர்களை அடையாளம் காண டி.என்.ஏ சோதனை நடத்தப்படவுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் கூறியுள்ளதாக ஏ.என்.ஐ கூறியுள்ளது. இந்த தகவலை நீலகிரி மாவட்ட ஆட்சியரும் உறுதிப்படுத்தியுள்ளார். எனினும், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம், விபத்தில் எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக, முப்படைகளின் முதல் தலைமை தளபதி பிபின் ராவத்தின் நிலை என்ன என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.
இச்சூழலில், விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் இருந்து மீட்கப்பட்ட ராணுவ கேப்டன் வருணுக்கு வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவருக்கு 80% அளவுக்கு தீக்காயங்கள் ஏற்பட்டதாக தகவல் கூறுகின்றன.
இதனிடையே, ஹெலிகாப்டர் விபத்து நடைபெற்ற இடத்தில் விமானப்படை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து வருகின்றனர்.