





கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் இந்தியாவில் அதிகரித்து வருகிறது.இதன் காரணமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் மக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதைத் தடுக்கும் வகையில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகின்றன.
இந்நிலையில் கரோனா நோய்த் தொற்றிலிருந்து மக்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ள "தனித்திரு, விழித்திரு, விலகியிரு" என்பதனை முன்னிலைப்படுத்தி கடலூரில் 'கடலூர் சிறகுகள்' அமைப்பு சார்பில் கரோனோ ஓவியம் வரையப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.இதேபோல் பண்ருட்டி நான்கு முனை சந்திப்பில் ஏராளமான ஓவியர்கள் திரண்டு சமூகப் பரவலைத் தடுக்க சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்தும் விதமாக கரோனா வைரசைக் கொடிய அரக்கனாக சித்தரித்து விழிப்புணர்வு ஓவியம் வரைந்தனர்.
இதேபோல் விருத்தாசலம் பாலக்கரை ரவுண்டானாவிலும் தமிழ்நாடு ஓவியர் சங்கம் சார்பில் கரோனா விழிப்புணர்வு ஓவியம் வரையப்பட்டுள்ளது. பொதுமக்கள் இதனைப் பார்த்தப்படி சாலையைக் கடந்து செல்கின்றனர்.