”மொழி என்பது நம்மை பொறுத்தவரை எழுத்தாக அல்ல, நம் ரத்தமாக இருக்கிறது” என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கலிபோர்னியாவில் வட அமெரிக்கா தமிழ்ச் சங்கப் பேரவையின் 36-வது தமிழ் பெருவிழா நிகழ்ச்சி இன்று நடைபெற்று வருகிறது. இதற்கு சிறப்பு விருந்தினராகக் காணொளி காட்சி மூலம் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டார்.
அந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “மொழி என்பது நம்மை பொறுத்தவரை எழுத்தாக இல்லை, நம் ரத்தமாக இருக்கிறது. தமிழ் என்பது மொழி மட்டுமல்ல அதை அமுதமாக, உயிராக, வாழவைக்கும் மண்ணாக, மணமாக உள்ளது. தமிழ் மொழி எப்போதும் வாழ வைக்கும்; வாழ வைத்துக்கொண்டே இருக்கிறது. இந்தியத் துணைக் கண்டத்தின் வரலாறு இனி தமிழகத்திலிருந்துதான் தொடங்க வேண்டும். தமிழ் என்பதைப் பெயராக வைத்துக் கொள்ளும் முன்னோடி இனமாக நாம் உள்ளோம். தொல்லியல் ஆய்வுகளுக்குத் தமிழக அரசால் ஊக்கமளிக்கப்படுகிறது.
நாட்டிலேயே அதிகளவில் கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்ட மாநிலம் தமிழ்நாடுதான். அதுவும் வைகை ஆற்றுப்பகுதியில்தான். ஒவ்வொரு ஆய்வின் முடிவிலும் தமிழர்களின் வரலாறு வெளிச்சத்திற்கு வருகிறது. தமிழ்நாட்டில் இரும்பின் பயன்பாடு 4,000 ஆண்டுகள் முந்தையது. சிந்து சமவெளி மக்கள் பேசியது தமிழ்மொழிதான். தொன்மை தமிழரின் பெருமை என்ற தலைப்பில் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கணிக்க முடியாத அளவிற்குத் தமிழ், தமிழருக்குத் தொன்மையான வரலாறு உண்டு. பார் முழுவதும் சென்று கொடி நாட்டிய தமிழரின் சிறப்பைக் காண வருகை தரவேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.