தமிழகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் சம்ஸ்கிருதம் படித்துத் தேர்ச்சி அடைந்தால் மட்டுமே 6ஆம் வகுப்பில் இருந்து 7ஆம் வகுப்புக்குச் செல்ல முடியும்.
சமீபத்தில் இந்த செய்தி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் வெளிவந்தது. சமஸ்கிருதத்துக்குப் பதில், தமிழை மொழிப் பாடமாக எடுத்து தமிழக மாணவர்கள் படிக்க முடியாது என்றும் அதில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக பேசிய தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.கே.இளமாறன், “தமிழ்நாட்டில் செயல்படும் 49 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ்மொழி புறக்கணிக்கப்படுவது அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. சமஸ்கிருதத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் இந்த அரசு, தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்க மறுப்பது ஏன்? உடனடியாக தமிழ்மொழி வகுப்புகளைத் தொடங்கிடவும் அதற்கான தமிழ்மொழி ஆசிரியர்களை நியமித்திடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் தாய் மொழிக் கல்விக்குப் பள்ளியில் இடம் இல்லாதபோது, தமிழகத்தில் அந்தப் பள்ளிகள் எதற்கு?” என்றார்.
இது தொடர்பாக தமிழக கேந்திரிய வித்யாலயா பள்ளியின் டெப்பிட்டி கமிஷ்னர் டாக்டர் எம். ராஜேஸ்வரியிடம் கேட்டபோது பேச மறுத்துவிட்டார்.