நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.
அதே வேளையில் நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகளைத் தேர்தல் ஆணையம் அமலுக்கு கொண்டு வந்துள்ளது. அந்த வகையில், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பிறகு தேர்தல் ஆணையம், போலீசார் மற்றும் அரசு அதிகாரிகள் பல்வேறு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இத்தகைய சூழலில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாட்டிற்கு எதிராக திமுக வழக்கு தொடர்ந்திருந்தது. திமுக சார்பில் அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர். எஸ். பாரதி இந்த வழக்கைத் தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், “தேர்தல் ஆணையத்தின் விதிப்படி தேர்தல் தொடர்பான விளம்பரங்களுக்கு அனைத்து கட்சிகளும் முன் அனுமதி பெற வேண்டும். ஆனால், திமுகவின் தேர்தல் விளம்பரங்களுக்கு முன் அனுமதி அளிப்பதில் தேர்தல் ஆணையம் பாரபட்சமாக செயல்படுகிறது. அற்ப காரணங்களுக்காக திமுகவின் தேர்தல் விளம்பரங்கள் நிராகரிக்கப்படுகின்றன. இந்தியாவைக் காக்க ஸ்டாலின் அழைக்கிறேன் என்ற தலைப்பில் நீட் தேர்வு ரத்து, பெட்ரோல் விலை உயர்வு, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக திமுக சார்பில் சில விளம்பரங்கள் வெளியிட தேர்தல் ஆணையம் அனுமதி மறுத்துள்ளது. எனவே அனுமதி கேட்கும் விளம்பரங்கள் தொடர்பான விண்ணப்பத்தை 2 நாட்களில் பரீசிலித்து அனுமதி தர வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா மற்றும் நீதிபதி சத்யநாராயனா அமர்வில் இன்று (15.04.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது திமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆஜராகி வாதிடுகையில், “தேர்தல் விளம்பரஙகள் தொடர்பாக விதிமுறைகள் வகுத்து கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகளை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள் இது குறித்து வரும் 17 ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.