வேலூரில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில் நடைபெற்ற இந்து சமய அறநிலையத்துறை நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூரில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நியமிக்கப்பட்டுள்ள மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பதவியேற்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வின் தொடக்கத்தில் இறைவாழ்த்து மட்டுமே பாடப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்து இடம்பெறவில்லை.
இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் துரைமுருகன், 'இந்துசமய அறநிலையத்துறை நிகழ்ச்சியும் அரசு நிகழ்ச்சிதான். எனவே தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவது கட்டாயம். இந்துசமய அறநிலையத்துறை விழாவில் தேவாரம் பாடட்டும், திருவாசகம் பாடட்டும் ஆனால் தமிழ்த்தாய் வாழ்த்து பாடாதது குறையாகத்தான் தெரிகிறது. அமைச்சர்கள் கலந்துகொள்ளும் விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடவேண்டும் என்பது அரசின் நியதி' என்றார்.