வேதாரண்யம் மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தி ஜிபிஎஸ் கருவி, செல்போன், பேட்டரி உட்பட ஐம்பதாயிரம் ரூபாய் மதிப்பிலான மீன்பிடி உபகரணங்களை கொள்ளையடித்து சென்றதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.
நேற்று முன்தினம் நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த ஆறுகாட்டுத்துறை மீனவ கிராமத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவர் தனக்கு சொந்தமான பைபர் படகில் மீன்பிடிக்கச் சென்றுள்ளார். அதே ஊரைச் சேர்ந்த மீனவர்கள் மதியழகன், குமரவேல், நெடுஞ்செழியன் உள்ளிட்டோரும் கூட்டாக மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். கோடியக்கரையின் தென்கிழக்கு பகுதியில் 8 கடல் நாட்டிகல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது அங்கு அடையாளம் தெரியாத பைபர் படையில் வந்த கடல் கொள்ளையர்கள் மீனவர்களை கத்தியைக் காட்டி மிரட்டி ஜிபிஎஸ் கருவி, செல்போன், மீன்பிடி வலை ஆகியவற்றை பறித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து ராமகிருஷ்ணன், வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசாரிடம் புகார் கொடுத்தார். இந்த புகாரை அடுத்து தற்போது இந்த தாக்குதல் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.