கடந்த 21 ஆம் தேதி காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சார்பாக சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய தமிழக ஆளுநர், ''சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளுக்கு பிறகும் இந்தியாவில் ஏழைகள் இருப்பதற்கு மேற்கத்திய கோட்பாடுகளை பின்பற்றியதே காரணம். சார்லஸ் டார்வின் பரிணாம வளர்ச்சி குறித்த கோட்பாடும், ஆபிரகாம் லிங்கனை ஜனநாயகத்திற்கு உதாரணமாகக் காட்டுவதும் மேற்கத்திய அடிமை மனநிலைக்கான உதாரணம். கார்ல் மார்க்ஸின் சிந்தனை தான் ஒரு காலத்தில் இந்தியாவை சிதைத்தது” எனப் பேசிய ஆளுநர், இந்தியாவின் அண்மைக்கால வளர்ச்சியை இந்து வளர்ச்சி விகிதம் எனக் குறிப்பிட்டார். இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் சிதம்பரம் வந்திருந்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கருப்புக் கொடி காட்டப்பட்டு போராட்டம் நடைபெற்றது.
இந்நிலையில் பாஜகவை சேர்ந்த ஹெச்.ராஜாவிடம் செய்தியாளர்கள் இது குறித்து கேள்வி எழுப்பினர். அப்பொழுது அதற்கு பதிலளித்த ஹெச்.ராஜா, ''ஆளுநர் உண்மையை பேசுகிறார். ஏனென்றால் திராவிட இயக்கத்தினுடைய விதை பொய். கால்டுவெல் என்பவர் மதம் மாற்றுவதற்காக வந்தவர். அவர் அயர்லாந்தில் இருந்து வந்த மிஷனரி தான். அவருடைய பொய் உரைகளையும், பிழையுரைகளையும் ஏற்றுக் கொண்டுள்ளனர். அதேபோல் மார்க்ஸ் பற்றி ஒரு தவறான பிம்பத்தை இங்கே படைக்கிறார்கள். நான் மார்க்ஸை பற்றி படித்திருக்கிறேன் அதனால் தான் அந்த அசிங்கத்தில் கை வைக்கக் கூடாது என்பதற்காக பாஜகவில் இணைந்துள்ளேன். கார்ல் மார்க்ஸ் ஜாதிகள் இருக்கிறது அதை அங்கீகரிக்கிறேன் என்று பேசியுள்ளார். அவர் பேசினார் என்பதற்கு ஆதாரத்தை நான் தருகிறேன். தமிழக ஆளுநர் உண்மையைப் பேசுகிறார். தமிழ்நாட்டு மக்களுக்கு தேசியத்தை பற்றி அறிய செய்ய வேண்டும் என்ற முயற்சியில் சொல்கிறார்'' என்றார்.