தமிழருக்கான தமிழீழ தனி நாடு கோரிய விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையேயான யுத்தம் 2009- ஆம் ஆண்டு மே 18- ல் முடிவுக்கு வந்தது. இந்த இறுதி யுத்த நாட்களில் பல லட்சக்கணக்கான தமிழர்களை சிங்கள ராணுவம் கொன்று குவித்தது. பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கதி என்ன என்பது இன்று வரை தெரியவில்லை.
இதனால் ஆண்டுதோறும் மே 18- ஆம் தேதி அன்று தமிழகம் முழுவதும் இலங்கையில் உயிர் நீத்த தமிழர்களுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, இன்று (18/05/2022) சென்னை உள்ளிட்ட நகரங்களில் பொதுமக்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
அந்த வகையில், சமூக ஆர்வலரும், நடிகையுமான கஸ்தூரி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "நினைவுச் சின்னத்தை அகற்றலாம், நினைவுகளை அழிக்க முடியுமா? அன்று பற்றியெரிந்த முள்ளிவாய்க்கால். ஆண்டாண்டு காலமாக பற்றியெரியும் தமிழ் உணர்வு. சும்மா விடுமா? எரிகிறது இலங்கை. அனுமன் வாலெரிச்சல் ராவணனை சுட்டது. தமிழர் வயிற்றெரிச்சல் ராஜபக்ஷேக்களை சுடாமல் ஓயாது" என்று குறிப்பிட்டுள்ளார்.