சவுதி அரேபியாவின் மக்கா மாநகரத்தில் அமைந்துள்ளது இஸ்லாமியர்களின் புனிதப் பள்ளிவாசலாம மஸ்ஜித்-உல்-ஹரம். நபிகள் நாயகம் பிறந்த நகரும், புனித நூலான குர் ஆன் அருளப்பட்ட நகருமான பிரசித்தி பெற்ற இங்கு, உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான இஸ்லாமியர்கள் ஹஜ் மற்றும் உம்ரா கடமையை நிறைவேற்றுவதற்காக புனிதப் பயணம் மேற்கொள்கின்றனர்.
இங்குள்ள மக்கா நூலகத்தில் உருது மொழி மட்டுமின்றி சீனம், ஜெர்மன், ரஷ்யன், சிந்தி, கொரியன், என 20 மொழிகளில் வெளியான பல்லாயிரக்கணக்கான இஸ்லாமிய நூல்கள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால், தமிழ் மொழியின் சார்பில் குர் ஆனைத் தவிர வேறு எந்த நூலும் அங்கே இல்லை.
சமீபத்தில் உம்ரா பயணத்திற்காக மக்காவிற்கு பயணம் செய்தார் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் மாநில துணை பொதுச்செயலாளர் பேராசிரியர் ஹாஜா கனி. அப்போது, மக்கா நூலகத்திற்கு சென்றபோது அங்கு தமிழ் மொழியில் குர் ஆனைத் தவிர்த்து வேறெந்த நூலும் இடம்பெறாததைக் குறித்து விசாரித்தபோது, அதற்கான ஏற்பாடுகள் நடக்காதது தெரியவந்தது. தற்போது தமிழ் நூல்கள் கொண்டுசெல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேராசிரியர் ஹாஜா கனி பேசுகையில், ‘மக்காவின் நூலக வருகையாளர்கள் பதிவேட்டில் தமிழில் கையெழுத்து போட்டு, தமிழ் மொழியை பதிவு செய்துவிட்டு நுழைந்தோம். அங்கு ஏராளமான நூல்களைக் காணமுடிந்தது. குறிப்பாக, எந்தெந்த மொழிகளில் நூல்கள் இடம்பெற்றுள்ளன என்பதை விளக்கும் பலகையில், கடைசிக்கு முந்தைய இடத்தில் மராத்திக்கு மேலாக தமிழ் மொழியின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதுகுறித்து நூலக நிர்வாகத்திடம் முறையிட்டு, ‘நபிகள் நாயகம் காலத்துக்கு முன்பிருந்தே தமிழ்நாட்டிற்கும் அரபகத்திற்கும் தொடர்பிருந்தது. நபிகள் நாயகத்தின் காலத்திலேயே அவருடைய தோழர்கள் தமிழகத்திற்கு வந்துள்ளனர். வணிகத் தொடர்பு மற்றும் மார்கத் தொடர்பு கொண்டிருந்த பழைமையான மொழி தமிழ். எங்கள் தமிழ் மன்னர் சேரமான் பெருமாள் நபிகள் நாயகத்தை நேரில் சந்தித்து இஸ்லாத்தைத் தழுவியர்’ எனக் கூறியதும், இத்தனை பெரிய வரலாறு கொண்ட தமிழ் மொழியை பின்னுக்குத் தள்ளியிருக்கக் கூடாது என்பதை நூலக மேற்பார்வையாளர் ஜெஃப்ரி ஏற்றுக்கொண்டார்.
மேலும், தமிழ் மொழி நூல்கள் இல்லாதது பற்றி கேட்டபோது, அவற்றை வாங்குவதற்கான கொள்முதல் கமிட்டி இன்னமும் அமைக்கவில்லை என்றார். உடனே, தமிழ் மொழியில் அமைந்திருக்கிற ஆதாரப்பூர்வமான இஸ்லாமிய நூல்களைத் தருவதாக உறுதியளித்ததோடு, இறைவனுக்காக தரும் அந்த நூல்களுக்கு பணம் தேவையில்லை என்றும் கூறினோம். கவிக்கோ அரங்கத்தின் முஸ்தபா அவர்களிடம் தகவல் தெரிவித்தோம். அதோடு பேராசிரியர் ஜவாஹிருல்லாவிடம் ஆலோசனையும் பெற்றுக்கொண்டோம். தற்போது புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. சினர்ஜி இண்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் நூல்களைக் கொண்டுவரும் வேலைகள் நடக்கின்றன. இனி உலக மொழி நூல்களுக்கு மத்தியில் தமிழ் மொழி நூல்களும் இடம்பெறும். மக்கா செல்பவர்கள் அவற்றைப் படிக்கலாம்” எனப் பெருமையோடு பேசி முடித்தார்.