தமிழகத்தின் நீர்நிலை அதள பாதாளத்திற்கு போய் விட்டது. நிலத்தடி நீரை பாதுகாக்க ஏரிகள், குளங்கள், குட்டைகளை அரசாங்கங்கள் பாதுகாக்கவும் பராமரிக்கவும் தவறியதும் அதிகாரிகள் நீர்நிலைகளை தனியாருக்கு தாரைவார்த்ததுமே இந்த அவல நிலைக்கு தள்ளப்பட்டதற்கு காரணமாகி விட்டது. கடந்த காலங்களில் பயிர்களை காப்பாற்ற தண்ணீர் கேட்டு போராடிய நிலை மாறி தவிச்ச வாய்க்கு தாகம் தீர்க்க தண்ணீர் கொடு என்று குடிதண்ணீருக்காக அடுத்த மாநிலத்தை கையேந்தி நிற்க வேண்டிய அவல நிலைக்கு அரசாங்கங்கள் தள்ளி விட்டது. இந்த நிலை மாற வேண்டும். மீண்டும் நிலத்தடி நீரை பாதுகாக்க வேண்டும் இனியும் அரசாங்கங்களை நம்பினால் அடுத்த வேலை சோத்துக்கும் ஒரு வாய் தண்ணீருக்கும் ஒட்டுமொத்த தமிழக மக்களும் கையேந்தும் நிலை வந்துவிடும் என்று இளைஞர்கள் சொந்த முயற்சியில் நிலத்தடி நீர் பாதுகாப்புக்காக சொந்த பணத்தில் நீர்நிலைகள் சீரமைப்பு பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
கடந்த ஆண்டு தஞ்சை மாவட்டம் களத்தூர் கிராமத்தில் ரூ 59 லட்சம் செலவு செய்து தண்ணீரை உயர்த்திய இளைஞர்கள், தற்போது 550 ஏக்கர் பரபரப்பளவில் சுமார் 5500 ஏக்கர் விளைநிலங்களை செழிக்க வைத்த பேராவூரணி பெரிய குளத்தை தூர்வாரும் பணியை கடந்த வாரம் தொடங்கி தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள் கைஃபா நண்பர்கள். பல கிராமங்களை சேர்ந்த ஆர்வமுள்ள இளைஞர்கள் இணைந்து களப்பணியிலும் களப்பணிக்கு தேவையான பொருளாதாரம் திரட்டும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர். இந்த ஒரு குளம்மட்டுமல்ல நீர்நிலைகளை உயர்த்த எங்கள் உழைப்பையும் பொருளாதாரத்தையும் கொடுக்க தயாராக இருக்கிறோம் என்று சொல்லும் இளைஞர்கள் அடுத்த கிராமத்தில் இப்படியான பணிகளில் ஈடுபடும் இளைஞர்களை ஊக்கப்படுத்த உதவிகளையும் செய்து வருகிறார்கள்.
புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலத்தில் 50 நாட்களாக நீர்நிலைகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள இளைஞர்களை ஊக்குவிக்க அவர்கள் நடும் மரக்கன்றுகள் கூண்டு வலைகளை வழங்கினார்கள். இளைஞர்களின் செயலைப் பார்த்து பலரும் உதவிக்கு முன் வந்துள்ளனர். வெளியூர்களில் தனியார் பணிகளில் இருந்த இளைஞர்கள் வேகாத வெயிலில் குளத்திற்குள் நின்று களப்பணி செய்கிறார்கள். இந்த நிலையில் தான் ஞாயிற்றுக் கிழமை பெரிய குளத்திற்கு சென்று இளைஞர்களின் பணிகளை பார்த்து வியந்த தமீமுன் அன்சாரி எம் எல் ஏ அவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்தார். இது குறித்து தமீமுன் அன்சாரி எம் எல் ஏ கூறும் போது சோழர்கள் வெட்டிக் காத்த குளத்தை ஆங்கிலேயர்கள் பராமரித்து வைத்தனர் அதன் பிறகு இப்போது தான் இளைஞர்கள் கையில் எடுத்துள்ளனர்.
இது மிகப்பெரிய குளம் இதை சீரமைப்பது என்பது கடினமான பணி என்ற போதும் எங்களால் முடியும் என்று களமிறங்கியுள்ளனர். அரசாங்கம் செய்ய வேண்டிய பணியை இளைஞர்கள் செய்கிறார்கள் என்பதை நேரில் காண முடிந்தது. அந்த இளைஞர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். இதே போல மற்ற கிராமங்களிலும் இளைஞர்கள் ஆர்வமாக களமிறங்கி உள்ளார்கள் என்ற தகவல் மகிழ்ச்சி அளிக்கிறது. அரசாங்கம் இனிமேலாவது ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர் நிலைகளை சீரமைக்க முன்வர வேண்டும் என்றார்.