Skip to main content

“எங்கக்கிட்ட பேசுங்க...” அமைச்சருக்கு கோரிக்கை விடுக்கும் தொகுதி நிர்வாகிகள்!

Published on 26/06/2021 | Edited on 26/06/2021

 

‘‘ Where to talk ... ’’ executives requesting the Minister!

 

திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. கடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் இந்த மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளிலும் திமுகவே போட்டியிட வேண்டுமென தொண்டர்கள் விரும்பினார்கள். அதனால், “எங்கள் மாவட்டத்தில் கூட்டணிக் கட்சிகளுக்கு சீட் ஒதுக்க வேண்டாம். 8 தொகுதிகளிலும் நீங்கள் நம் கட்சியினருக்கு சீட் தாருங்கள். சீட் தரும் நபர்களை வெற்றிபெறவைக்கிறேன்” என மா.செ எ.வ. வேலு வலியுறுத்திக் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில், இந்த 8 தொகுதிகளிலும் திமுகவே நேரடியாக போட்டியிட்டது. தேர்தல் முடிவில் 8 தொகுதிகளில் 6 தொகுதிகளில் மட்டும்மே திமுக வெற்றிபெற்றது. மீதி இரண்டு தொகுதிகளில் அதிமுக வெற்றிபெற்றது.

 

ஆரணி தொகுதியில் முன்னாள் அமைச்சர் சேவூர். ராமச்சந்திரன், போளுர் தொகுதியில் முன்னாள் அமைச்சர் அக்ரி. கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் வெற்றிபெற்றனர். இதனால் அதிருப்தியான பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு இந்த இரண்டு தொகுதிகளின் கட்சி நிர்வாகிகளை அழைத்துப் பேசவும், சந்திக்கவும் மறுக்கிறார் என்கிறார்கள் இந்த இரண்டு தொகுதிகளின் நிர்வாகிகள்.

 

இதுபற்றி நம்மிடம் பேசிய சில நிர்வாகிகள், “தவறு யாரோ செய்தார்கள். தவறு செய்த நிர்வாகிகளைத் தண்டிப்பதை விட்டுவிட்டு, கட்சியின் வெற்றிக்காக தீவிரமாக வேலை செய்த எங்களைப் புறக்கணிப்பது எந்தவிதத்தில் நியாயம்?. ஆரணி தொகுதி வேட்பாளராக அன்பழகன் அறிவிக்கப்பட்டபோது, அதிமுக நிர்வாகிகள் தங்களது தோல்வி உறுதியென உறுதியாக நம்பினார்கள். கள நிலவரமும் அப்படித்தான் இருந்தது. ஆனால் வேட்பாளருடன் இருந்த சிலரும், சீட் கிடைக்காத சில நிர்வாகிகளும் இணைந்து செய்த துரோகம்தான் தோல்விக்கு காரணம். ஆரணி தொகுதியில் வரும் 6 ஒன்றியத்தில் இரண்டு ஒன்றியங்களில்தான் வாக்கு மிகவம் குறைவு. மேற்கு ஆரணி ஒன்றியத்தின் வடக்கு ஒ.செ வெள்ளை கணேசன், ஆரணி ஒன்றியம் தெற்கு பகுதி ஒ.செ சுந்தர், ஆரணி ஒன்றியம் வடக்கு பகுதி ஒ.செ அன்பழகன் (வேட்பாளர்) பகுதிகளில் வாக்குகள் மிகவும் குறைவு. அதுமட்டுமில்லாமல் எங்கள் கட்சியின் வேறுசில நிர்வாகிகளும் அதிமுக வேட்பாளரிடம் விலைபோனார்கள்.

 

தேர்தல் பிரச்சாரம் நடந்துகொண்டிருந்தபோது எங்கள் வேட்பாளர் அன்பழகனிடம் வந்த கட்சியின் தொண்டர் ஒருவர், ‘கட்சி வெற்றிபெறணும், உங்களுக்காக வேலை செய்ய வந்திருக்கன், என்ன வேலை செய்யட்டும் சொல்லுங்கண்ணா’ அப்படின்னு கேட்டார். வேட்பாளர் கூடவே சுற்றி வந்த, வேட்பாளர் முழுவதும் நம்பிய நகரப் பொருளாளர், ‘என்ன வேலைக் கொடுத்தாலும் செய்வியா’ன்னு அந்தத் தொண்டரிடம் நக்கலா கேட்டார். செய்வன்னு சொன்னதும், போய் அந்த பாத்ரூம் கழுவுன்னு சொல்லி அசிங்கப்படுத்தனார். இது ஒரு உதாரணம்தான். வெற்றி வந்துடுச்சிங்கற மமதையில் இப்படி தொண்டர்களிடமே நடந்துக்கிட்டாங்க, வேட்பாளருடன் இருந்தவங்க.

 

சீட் கிடைக்காத விரக்தியில் இருந்த சில ஒ.செக்கள் சரியாகவே வேலை செய்யல. தேர்தல் அலுவலகத்துக்கு வருவாங்க, சும்மாவே உட்கார்ந்திருந்துட்டு கிளம்பிடுவாங்க. வேட்பாளர் எது கேட்டாலும் இதோ இப்பத்தான் செய்தோம்னு சொல்லுவாங்க. ஓட்டுக்குப் பணம் தருவதிலும் சில ஒ.செக்கள் கோல்மால் செய்தாங்க.

 

திமுகவுக்கு எங்கெல்லாம் வாக்கு அதிகமாக விழுமோ, அந்தப் பகுதியைக் குறிவச்சாங்க. கண்ணமங்களம் பேரூராட்சியில் திமுக எல்லா தேர்தலிலும் லீடீங் வரும். இந்தத் தேர்தலில் பெரிய பின்னடைவு. அதேபோல் முதலியார்கள் அதிகமுள்ள பகுதியில் முதலியாரான அதிமுக வேட்பாளருக்கு வாக்குகள் விழவில்லை, வன்னியரான திமுகவுக்கு வாக்குகள் விழுந்தன. வன்னியர் வாக்குகள் திமுகவுக்கு எனச் சொல்லப்பட்ட கிராமங்களில் முழுவதும் அதிமுக வேட்பாளருக்கு விழுந்தன.

 

அதேபோல், தொகுதிக்கு தேர்தல் பொறுப்பாளர் போடவில்லை. வேட்பாளரே தொகுதி பொறுப்பாளராகவும் இருந்தார். அவர் பிரச்சாரம் செய்துகொண்டிருந்ததால் அவரால் நிர்வாகிகளை விரட்டி வேலை வாங்க முடியவில்லை. சில நிர்வாகிகள் விலைபோனதுதான் இந்தத் தோல்விக்கு காரணம். அவர்கள் யார், எவ்வளவு வாங்கினார்கள் என்றும் தெரிகிறது. அவர்கள் யார் என்பதைக் கண்டறியட்டும், அல்லது எங்களை அழைத்து தனித்தனியாக கேட்கட்டும் சொல்கிறோம். அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்குப் பதில் ஒட்டுமொத்தமாக அனைத்து நிர்வாகிகளையும் ஒதுக்குவது எந்த விதத்தில் சரியானது” எனக் கேள்வி எழுப்புகிறார்கள் வெற்றிக்காக உண்மையாக பாடுபட்ட நிர்வாகிகளும், தொண்டர்களும்.

 

திமுக வேட்பாளரை எதிர்த்து வெற்றிபெற்றது எப்படியென அதிமுகவின் முக்கிய நிர்வாகி ஒருவரிடம் கேட்டபோது, “கூட்டணியில் இருந்த பாமக அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை செய்ததால் பாமக நிர்வாகிகள் தீவிரமாக வேலை செய்தாங்க. அதைவிட அதிகமா வேட்பாளர் சேவூர். ராமச்சந்திரன் வாரி இறைத்த பணம் வேலை செய்தது. நிர்வாகிகளுக்குத் தாராளமாகப் பணம் செலவு செய்யப்பட்டது. பத்தாயிரம் ரூபாய் ஒர்த் இல்லாத நிர்வாகிகளுக்கு 50 ஆயிரம் வாரி தரப்பட்டது. திமுகவுக்கு எங்கெல்லாம் அதிகம் வாக்கு விழும் என கணக்கெடுக்கப்பட்டது அதில் 22 கிராமங்கள் வந்தன. அந்தக் கிராமத்தில் உள்ள முக்கிய பிரமுகர்களைக் கணிசமாக இரவில் தோப்புகளில், அரிசி ஆலைகளில் சந்தித்து, தர வேண்டியதைப் பெரிய அளவில் தந்தோம். அது வீண்போகவில்லை. 6 கிராமங்களில் எங்களுக்கு ஓட்டுக்களை வாரி தந்தது. வடுகசாத்து என்கிற கிராமத்தில் மட்டும் திமுகவைவிட 1,050 வாக்குகள் அதிகமாக எங்கள் வேட்பாளர் வாங்கினார். அங்கிருந்த திமுக நிர்வாகிகளைக் கணிசமாக கவனித்தோம். ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய், காமாட்சியம்மன் விளக்கு என வாக்காளனுக்கு தரப்பட்டது. திமுகவுக்கு மட்டுமே வாக்களிக்கும் குடும்பம் என்றால் அந்த வீட்டில் உள்ள அனைத்து ஓட்டுக்கும் பணம் தரப்பட்டது. அதிமுகவினர் ஓட்டுக்கு கூட அப்படி தரவில்லை. 49 கோடி ரூபாய் செலவு செய்தே இந்த வெற்றியை எங்கள் வேட்பாளர் பெற்றார். இந்த வெற்றி நாங்களே எதிர்பாராத வெற்றி. திமுகவினரிடம் இருந்த வீக்னஸ்களை நாங்கள் பயன்படுத்திக்கொண்டோம்” என்றார் சிரித்தபடி.

 

கட்சிக்குத் துரோகம் செய்த, செயல்படாத, தொண்டர்களை மதிக்காத நிர்வாகிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே தொண்டர்களின், உண்மையாக உழைத்த நிர்வாகிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்