சேலத்தில், பணம் கொடுக்காமல் ஓசியில் மதுபானம் வாங்கிய வாலிபரை ஒரு கும்பல் அடித்துக்கொன்ற சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். சேலம் உடையாப்பட்டி அருகே உள்ள கக்கன் காலனியைச் சேர்ந்தவர் ராமசாமி. இவருடைய மகன் சதீஸ் (22). கடந்த சில ஆண்டுகளாக மும்பையில் தங்கி வேலை செய்து வந்தார்.
கடந்த சில நாள்களுக்கு முன்பு சேலத்திற்கு வந்தவர், இங்கு பெயிண்டிங் வேலைக்குச் சென்று வந்தார். சதீஸ்க்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. கக்கன் காலனியைச் சேர்ந்த திலீப் (30) என்பவர், மதுபானங்களை சட்ட விரோதமாக குடியிருப்பு அருகே சந்துக்கடையில் வைத்து விற்பனை செய்துவந்தார். செவ்வாய்க்கிழமை (ஜூன் 4, 2019) இரவு, திலீப் வீட்டிற்குச் சென்று சதீஸ் மதுபானங்களை கேட்டுள்ளார். அதற்கு அவர், தான் மதுபானங்கள் விற்பனை செய்வதில்லை என்று கூறியுள்ளார். ஆனாலும் அவர் பொய் சொல்வதாகக்கூறிய சதீஸ், தனக்கு உடனடியாக மதுபானங்கள் வேண்டும் என்று தொடர்ந்து நச்சரித்துள்ளார். அதனால் அவரை திலீப் ஆபாச வார்த்தைகளால் திட்டி அங்கிருந்து விரட்டிவிட்டார்.
இதையடுத்து சதீஸ் அங்கிருந்து வீடு திரும்பினார். ஆனால் சிறிது நேரத்தில் திலீப் தனது கூட்டாளிகள் 5 பேருடன் சதீஸ் வீட்டிற்குச்சென்று, என் வீட்டில் வைத்திருந்த 2000 ரூபாயை எடுத்து வந்துவிட்டாயா? எனக்கேட்டு தகராறு செய்தனர். அதை சதீஸின் பெற்றோர் தடுத்துள்ளனர். ஆனால் திலீப் தரப்பினர் ஆத்திரத்தில் சதீஸையும், அவருடைய பெற்றோரையும் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதில் படுகாயம் அடைந்த சதீஸை மீட்ட அப்பகுதியினர், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்குக் கொண்டு சென்றனர். மருத்துவர்கள் பரிசோதனையில் அவர், வரும் வழியிலேயே இறந்திருப்பது தெரிய வந்தது. காயமடைந்த பெற்றோருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அம்மாபேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, திலீப் மற்றும் கூட்டாளிகளைத் தேடி வருகின்றனர்.
இதற்கிடையே, கொலையுண்ட சதீஸின் உறவினர்கள் புதன்கிழமை (ஜூன் 5) காலையில் உடையாப்பட்டியில் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். திலீப்பின் மனைவியிடம் பணம் கொடுக்காமல் சதீஸ் மதுபானம் வாங்கி வந்ததாக கூறியுள்ளார். இதைக்கேட்க வந்த திலீப்பும், கூட்டாளிகளும் 30 ரூபாய்கூட கொடுக்காமல் ஓசியில் மதுபானம் வாங்கி வந்தாயா? எனக்கேட்டு தாக்கினர். இதில் சதீஸ் இறந்து விட்டார். உடனடியாக குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டும் என்று அவரது உறவினர்கள் கூறிவருகின்றனர்.
குற்றவாளிகளை கைது செய்வதாக காவல்துறையினர் உறுதி அளித்ததைத் தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டனர். இதனால் அந்தப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.