இன்று (10-01-2019) திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் , திருச்சி மாவட்டம் மணப்பாறை ஒன்றியத்துக்கு உட்பட்ட சீகம்பட்டி ஊராட்சியிலும், திருவரங்கம் தொகுதி நவலூர் குட்டப்பட்டு ஊராட்சியிலும் தி.மு.கழக ஊராட்சி சபைக் கூட்டங்களில் கலந்துகொண்டு பேசினார். அதன் முழுவிவரம் பின்வருமாறு:
’’இங்கு நீங்கள் எல்லாம் வந்திருக்கின்ற காட்சியைப் பார்க்கின்ற போது அதுவும், ஆண்களைவிட பெண்கள், மகளிர், தாய்மார்கள் அதிக அளவில் வந்திருக்கின்றதை பார்க்கின்ற போது, எதைக் காட்டுகிறது என்று சொன்னால் எங்கள் மீது நீங்கள் வைத்திருக்கக்கூடிய நம்பிக்கையைக் காட்டுகின்றது. இந்தக் கூட்டத்தினுடைய நோக்கம் என்னவென்று உங்களுக்குத் தெரியும், தலைப்பிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்று, யாருக்கு என்றால்? தமிழ்நாட்டை ஆட்சி செய்து கொண்டிருக்கக்கூடிய அடிமை ஆட்சிக்கு – அராஜக ஆட்சிக்கு – அக்கிரம ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதேபோல், மத்தியில் ஆளக்கூடிய ஒரு பாசிச - நாசிச மோடி தலைமையில் நடைபெறக்கூடிய பி.ஜே.பி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நேரத்தில் ஒரு துவக்கப்புள்ளியாக தி.மு.க ஆட்சியை தமிழ்நாட்டில் உருவாக்கித் தருவதற்கு இந்த நிகழ்ச்சி இருந்திட வேண்டும். இந்த கிராமசபைக் கூட்டம் நடத்துவதற்கு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நாங்கள் திட்டமிட்ட போது ஒரு முழக்கத்தை நாங்கள் தேர்வு செய்தோம். என்ன முழக்கம் என்று கேட்டீர்கள் என்றால், “மக்களிடம் செல்வோம் - மக்களிடம் சொல்வோம் - மக்கள் மனங்களை வெல்வோம்” என்ற அந்த உணர்வோடு இந்த முழக்கத்தை அடிப்படையாக வைத்து இந்தக் கூட்டத்தை நாம் நடத்திக் கொண்டிருக்கிறோம்.
தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய நிலைமைகள் எல்லாம் உங்களுக்குத் தெரியும். இவற்றையெல்லாம் இந்த விஞ்ஞான உலகிலே நீங்கள் எளிதில் அறிந்து புரிந்து கொள்கிறீர்கள் என நம்புகிறேன். ஆனால், ஊடகங்களைப் பொறுத்த வரையில் நம்முடைய கட்சி வளர்ந்திருப்பதைப் பார்த்து, அதனால் மக்கள் மனதில் எழுச்சி வருவதைப் பார்த்து நமது கட்சி வரக்கூடாது, இதை எப்படியாவது ஒழிக்க வேண்டும் என்று திட்டமிட்டு சிலர் பிரச்சாரங்கள் செய்து வருகிறார்கள். ஊடகங்களில் எல்லாம் என்ன செய்ய வேண்டும் என்றால், ஒரு நியாயத்தை எடுத்துச் சொல்ல வேண்டும், விளக்கத்தை எடுத்துச் சொல்ல வேண்டும். அதைவிட்டு விட்டு குழப்பத்தை ஏற்படுத்திக்கொண்டு இருக்கின்றார்கள். அதுதான் இன்றைக்கு நடந்துகொண்டு இருக்கின்றது. தி.மு.க வின் வளர்ச்சியைத் தாங்கிக்கொள்ள முடியாதவர்கள் திட்டமிட்டு செய்து கொண்டிருக்கின்றார்கள்.
அதை முறியடிக்கத்தான் இதுபோன்ற கிராம சபைக் கூட்டத்தை நடத்த துவங்கியிருக்கிறோம். அதற்கு ஒத்துழைப்பு தருவதற்கு நீங்கள் வந்திருக்கக்கூடிய காட்சியைப் பார்க்கும் போது, தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வரும் என்ற நம்பிக்கை எங்களைவிட உங்களுக்குத்தான் அதிகம் இருக்கின்றது என்பதை என்னால் உணர முடிகிறது. டி.வி.யில் என்னென்ன சீரியல் ஓடிக் கொண்டிருக்கின்றதோ அதையெல்லாம் விட்டு வந்து உட்கார்ந்து கொண்டிருக்கின்றீர்கள். நீங்கள், அந்தளவிற்கு விட்டு வரக்கூடிய பெரிய தியாகத்தை செய்து வந்திருக்கின்றீர்கள் என்றால், இந்தக் கட்சியின் மீது நம்பிக்கை! எங்களின் மீது நம்பிக்கை! குறிப்பாக என் மீது உங்களுக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய நம்பிக்கையை வெளிக்காட்டுகின்றது. அந்த உணர்வோடு வந்திருக்கக்கூடிய உங்களை நான் மீண்டும் திராவிட முன்னேற்றக் கழக்த்தின் சார்பில் இங்கிருக்கக்கூடிய, இந்த மாவட்டத்தைச் சார்ந்திருக்கக்கூடிய நிர்வாகிகளின் சார்பில் இந்த ஒன்றிய கழகத்தின் சார்பில், ஊராட்சிக் கழகத்தின் சார்பில் உங்கள் அத்துனை பேரையும் நான் வருக - வருக – வருக என்று மீண்டும் வரவேற்கின்றேன். இங்கு உங்களை நான் எதற்கு அழைத்திருக்கிறேன் என்றால், உட்கார்ந்திருக்கக்கூடிய அத்துனை பேரும் பேசக்கூடிய நேரம் இல்லை, வாய்ப்பில்லை. இந்த ஊராட்சியில் ஒரு 10 - 15 குறைகள் இருக்கலாம், தீர்க்கப்பட முடியாத சில பிரச்சினைகள் இருக்கலாம். தேவையான சில பிரச்சினைகள் இருக்கலாம் குடி நீர் – சாக்கடை – விளக்கு போன்ற பல பிரச்சினைகள் இருக்கலாம். அதேபோல் நேற்றைக்கு நான் திருவாரூர் புலிவனம் பகுதியில் இந்தப் பயணத்தை துவங்கினேன். அதேபோல் தஞ்சை சட்டமன்ற தொகுதியில் ஒரு ஊராட்சியில் துவங்கினேன். அதேபோல் நான் மட்டுமல்ல நம்முடைய பொருளாளர் துரைமுருகன் அவர்கள் ஈரோடு மாவட்டத்திலும், முதன்மைச் செயலாளர் டி.ஆர். பாலு அவர்கள் காஞ்சிபுரம் மாவட்டத்திலும், மாவட்டச் செயலாளர்களும் அந்தந்த மாவட்டங்களில் தொடங்கி வைத்து இந்தக் கூட்டத்தை நடத்திக் கொண்டிருக்கின்றார்கள்.
நம்முடைய தமிழ்நாட்டில் மொத்தம் 12,617 ஊராட்சிகள் இருக்கின்றது. அத்துனைக்கும் நான் போக முடியாது. ஆனால், நான் சென்றேன். எப்போது என்றால், நமக்கு நாமே பயணம் நடத்தியபோது கடந்த தேர்தலில் நேரத்தில் 234 சட்டமன்ற தொகுதிக்கும் நான் போனேன். ஒரு தொகுதிக்கு ஒரு இடம் தான். அது கிட்டதட்ட ஒரு மூன்று மாதத்தில் முடித்தேன். ஆனால், 12,617-ற்கும் போக முடியுமா என்றால் போக முடியாது. அதனால் நான் உட்பட ஒரு 400 பேரைத் தேர்ந்தெடுத்து தலைமைக் கழக நிர்வாகிகள் மாவட்டச் செய்லாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், இவர்கள் மூலமாக பிரித்துவிட்டு ஒருவர் 10 முதல் 30 ஊராட்சிக்குப் போகவேண்டும் என்று ஒரு முடிவெடுத்து அனுப்பினோம். பெருமையாக சொல்கின்றேன். இதுவரைக்கும் எந்தக் கட்சியும் செய்ய முடியாத ஒரு பெரிய சாதனையை ஊராட்சிக்கு நாம் செல்லுகின்றபோது அதை செய்யப்போகின்றோம்.
இன்றைக்கு ஏன் இந்த அவசியம் வந்திருக்கின்றது என்று நீங்கள் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். அ.தி.மு.க ஆட்சிக்கு வந்து 7 – 8 வருடம் ஆகிவிட்டது. உள்ளாட்சி அமைப்புத் தேர்தலை நியயமாக நடத்தியிருக்க வேண்டும். நடத்தியிருந்தால் உள்ளாட்சிகளுக்கு, ஊராட்சி அமைப்புகளுக்கு தலைவர்கள், கவுன்சிலர்கள் வந்திருப்பார்கள். அவர்கள் மூலமாகச் உங்கள் பிரச்னைகளை தீர்த்துக் கொள்ள முடியும். ஆனால், குடிநீர் பிரச்னை, சாலை வசதிகள், மின்சாரப் பிரச்னை, ரோடு பிரச்னை என இப்படிப் பல பிரச்னைகள் இன்றைக்கு இருக்கிறது. நானும் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தவன் தான். துணை முதலமைச்சராக இருந்தவன் தான். தி.மு.க ஆட்சியில் தலைவரின் ஆட்சியில் துணை முதலமைச்சராக இருந்தேன். அப்படிப்பட்ட உள்ளாட்சி அமைப்பு இருந்த போது முறையாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தியிருக்கின்றோம். ஆனால், இந்த ஆட்சியில் உள்ளாட்சித் தேர்தலைக் கூட நடத்துவதற்கு லாயக்கு இல்லாமல் இருக்கின்றது. இதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். உள்ளாட்சித் தேர்தல் இல்லாத காரணத்தினால் தான் மிக மோசமான நிலையில் உள்ளாட்சி அமைப்புகளில் பல அக்கிரமங்கள் நடைபெற்று வருகிறது. எந்த அடிப்படைப் பிரச்சினைக்கும் தீர்வு காண முடியாமல் உள்ளாட்சியில் இருக்கக்கூடிய மக்கள் இருந்து கொண்டிருக்கின்றார்கள். நான் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது 12,000 உள்ளாட்சிகளுக்கும் நிதி ஒதுக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் என்கின்ற பெயரில் ஒவ்வொரு ஊராட்சிக்கும் 20 இலட்ச ரூபாய். 20 இலட்ச ரூபாய் மட்டுமல்ல, மற்றத் துறைகள் மூலம் சேர்ந்து 1 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு குளங்கள் தூர்வாரபட்டன. அதற்குப்பிறகு ஒவ்வொரு ஊராட்சியிலும் நூல் நிலையங்கள் அமைக்க முடிவு செய்து அதனை செயல்படுத்தினோம். அதேபோல் எல்லா ஊராட்சிகளிலும் சாலை வசதிகள் ஏற்படுத்த பல திட்டங்களை தீட்டி செயல்படுத்திக் காட்டினோம். இதைவிட இன்னொரு பெரியத் திட்டம் சுடுகாடு. அந்த சுடுகாட்டை ஓய்வெடுக்கக்கூடிய பூங்காவைப் போன்று மாற்றி அமைத்துக் காட்டிய பெருமை திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு உண்டு. அதனை, நான் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது செய்தேன்.
இவ்வளவுப் பணிகளை உள்ளாட்சித்துறை அமைப்பின் மூலமாகத்தான் செய்ய முடியும். ஆனால், உள்ளாட்சி ஊராட்சி பிரதிநிதிகள் இன்றைக்கு இல்லை. தேர்தலை நடத்த இந்த ஆட்சி முன்வரவில்லை. ஏனென்றால் நடத்தினால், தி.மு.க வெற்றி பெற்றுவிடும் தி.மு.க ஜெயித்து விடும் என்ற ஓரவஞ்சனையோடு அரசியல் உள்நோக்கத்தோடு வேண்டுமென்றே, தடை போட்டு விட்டார்கள். அதற்கு என்ன காரணம் சொல்கின்றார்கள் என்றால், ஒவ்வொரு ஊராட்சிக்கும் உள்ளாட்சிக்கும் பிரதிநிதிகளே தேர்ந்தெடுக்க பெண்களுக்கென்று ஒரு இடம் இருக்கின்றது, தாழ்த்தப்பட்ட சமுதாயம் – மலைவாழ் மக்கள் இவர்களுக்கென்று இடம் ஒதுக்க வேண்டும். அதையெல்லாம் முறையாக வேண்டுமென்றே, முறையாக திட்டமிட்டு ஒதுக்காத காரணத்தால் தான் இந்த ஆட்சி நீதிமன்றம் உத்தரவிட்டும் இன்றைக்கு நடத்தமுடியாத சூழ்நிலையில் இருக்கின்றது. இதையெல்லாம் நீங்கள் நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். உள்ளாட்சித் தேர்தல் நடத்த வேண்டுமென்றால் தி.மு.க ஆட்சிக்கு வந்தால் தான் அது நடைபெறும். ஆகவே, நான் உங்களை எல்லாம் கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன். முன்னுரையாக, இப்பொழுது என்னுடைய உரையை முடித்துக்கொள்ள விரும்புகின்றேன். நீங்கள் எல்லாம் பேசியதற்குப்பிறகு நான் அதற்குரிய விளக்கங்ளை என்னுடைய கருத்துகளை எடுத்துச் சொல்லுகின்றேன் என்பதை மாத்திரம் எடுத்துச் சொல்லுகின்றேன்.
(அதன் பின்னர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்களிடத்தில் அந்தந்த ஊராட்சியைச் சேர்ந்த மக்கள் தங்களுடைய குறைகளை தெரிவித்தனர்.) பின்னர் கழகத் தலைவர் ஆற்றிய உரையின் விவரம் பின்வருமாறு:
’’திரும்பத் திரும்ப ஒரே பிரச்னை தான் வேலை வாய்ப்பின்மை, குடும்பப் பிரச்னை, அடிப்படை வசதிகள் இல்லாதது, கடன் பிரச்னை இதுபோன்ற பல பிரச்னைகளை நீங்கள் முன் வைத்துப் பேசியிருக்கிறீர்கள். இந்த ஊராட்சிகளில் மட்டுமல்ல நேற்றைய தினம் திருவாரூர், தஞ்சை போன்ற பகுதிகளுக்குச் சென்றபோது அங்கு மட்டும் இந்த பிரச்னை அல்ல, ஒட்டுமொத்த தமிழ்நாட்டில் உள்ள எல்லா இடத்திலும் இந்த பிரச்னைகள் இருக்கின்றது. இன்றைக்கு நான் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கிறேன் என்பது உங்களுக்குத் தெரியும். ஏற்கனவே நான் ஐம்பது வருடமாக பொதுவாழ்வில் ஈடுபட்டு பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருந்தபோதே திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது பற்றுக்கொண்டு பாசம் கொண்டு உறுப்பினராக அதற்குப் பிறகு, இளைஞரணியின் பொறுப்பினை ஏற்று படிப்படியாக வளர்ந்து சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றக்கூடிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ஏன், சென்னை மாநகரத்தில் இரண்டுமுறை மேயராக இருந்து பணியாற்றக்கூடிய வாய்ப்பை நான் பெற்றவன் அதற்குப் பிறகு தலைவருடைய ஆட்சிக்காலத்தில் உள்ளாட்சித்துறை அமைச்சராக, துணை முதலமைச்சராக என்று இப்படிப் பல பொறுப்புகளை ஏற்று ஏறக்குறைய ஐம்பது வருடமாக நான் இந்த அரசியலில் பொது வாழ்க்கையில் இருக்கின்றேன்.
என்னுடைய அனுபவத்தில், இதே தமிழ்நாட்டில் அண்ணா ஆட்சியில் இருந்திருக்கிறார், எம்.ஜி.ஆர் ஆட்சியில் இருந்திருக்கிறார், அம்மையார் ஜெயலலிதா ஆட்சியில் இருந்திருக்கிறார், தலைவர் கலைஞர் ஆட்சியில் இருந்திருக்கிறார், அதற்கு முன்பு ராஜாஜி, ஓமந்தூரார், பக்தவச்சலம் என பலர் முதலமைச்சராக இருந்து ஆட்சியை நடத்தி இருக்கின்றார்கள். ஆனால் இப்பொழுது எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடக்கின்ற இதுபோன்றதொரு ஒரு கேடுகெட்ட ஆட்சி, ஒரு அயோக்கியத்தனமான ஆட்சி, கமிஷன் வாங்கக்கூடிய ஆட்சி, கரப்சன் ஆட்சி இதுவரைக்கும் நாம் பார்த்தது இல்லை. இனிமேல் பார்க்கவும் முடியாது.
அந்த அளவிற்கு மோசமாக இந்த ஆட்சி இருக்கிறது. ஏனென்றால், அவர்களுக்கு நன்றாகத் தெரியும். அம்மையார் ஜெயலலிதா ஒரு மாஸ் லீடராக இருந்தார்கள், அவர்களது கொள்கையில் அவருக்கும் நமக்கும் ஒரு மாறுபாடு இருக்கலாம். ஆனால் ஒரு பெரிய செல்வாக்கு இருந்தது. எம்.ஜி.ஆருக்குப் பிறகு அம்மையார் ஜெயலலிதா ஆட்சியை சிறப்பாக நடத்தாவிட்டால் கூட அதனால் மக்களுக்கு பலனும் பயனும் கிடைக்காவிட்டால் கூட ஒரு மாஸ் லீடராக இருந்தார்கள். அது ஒரு கட்டம். ஆனால், அந்த அம்மையார் மறைவிற்குப் பிறகு இன்று என்ன நிலை என்பதை கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். அவரால் வளர்க்கப்பட்டவர்கள் உருவாக்கப்பட்டவர்கள் அவருடைய பெயரைச் சொல்லி இன்று ஆட்சி நடத்துபவர்கள் கொள்ளையடிப்பதில் தான் இருக்கிறார்கள். ஏனென்றால் எடப்பாடி பழனிசாமி பொறுத்தவரைக்கும், ஓ.பன்னீர் செல்வத்தை பொறுத்தவரைக்கும் நன்றாகத் தெரியும். திருப்பியும் நாம் ஆட்சிக்கு வரமுடியாது என்று நன்றாக தெரிந்ததால், இருக்கிற வரையில் கொள்ளையடித்து விட்டுப் போய்விடலாம் இருக்கிறவரை சம்பாதித்து விட்டு போய்விடலாம் என்று கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறார்கள். திரும்பவும் நாம் வரப் போவதில்லையே அதற்கெல்லாம் சேர்த்து இப்பொழுதே அடித்து விட்டு போய்விடலாம் என்று திட்டமிட்டு செயல்படுகிறார்கள்.
இங்கு என்னிடத்தில் ஒரு 20 மனுக்கள் வந்தது. அதை எல்லாம் எடுத்து ஒரு தலைப்புச் செய்தியாக தான் பார்த்தேன். அதில் ஆதரவற்றவர்களுக்கு ஓய்வூதியத் உதவித்தொகை கூட இந்த ஆட்சி வழங்கவில்லை என்பதுதான் அதிகளவு இருந்தது. இதுதான் இன்றைய தமிழ்நாட்டின் நிலை.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் ஏறக்குறைய 14 பேரை போலீஸ்காரர்கள் 2 துப்பாக்கியை எடுத்து குறிபார்த்து சுட்டார்கள். ஏதோ கூட்டத்தைக் கலைக்க வேண்டும் என்று கலைக்கவில்லை. கலைக்க வேண்டும் என்றால் தடியடி நடத்தி இருக்க வேண்டும். கண்ணீர்ப் புகை குண்டு வீசி இருக்க வேண்டும். தண்ணீர் பாய்ச்சி இருக்க வேண்டும். தடியடி நடத்தி அவர்களை கலைத்திருக்கலாம். ஆனால், திட்டமிட்டு குறிபார்த்து காக்கை குருவிகளை சுடுவது போல துப்பாக்கியை எடுத்து சுட்டு 14 பேர் இறந்திருக்கிறார்கள் என்றால், இதை நினைத்துப் பாருங்கள். ஒரு தொழில் அதிபருக்கு உதவி செய்ய வேண்டும் ஒரு தொழில் நடத்தக் கூடிய பெரிய மிட்டா மிராசுதாரர்களுக்கு உதவி செய்ய, அவர்களிடம் கமிஷன் வாங்கிக்கொண்டு இந்தக் காரியத்தை செய்திருக்கிறார்கள். இந்த நிலைதான்.
இங்கு வேலைவாய்ப்பு இல்லாதது பற்றிச் சொன்னீர்கள். கல்விக்கடன் பற்றி சொன்னீர்கள். கடந்த முறை தேர்தலில் திமுக ஆட்சிக்கு வந்தால் கல்விக்கடனை திமுக முழுமையாக ரத்து செய்யும் என்று கலைஞர் அவர்கள் உறுதிமொழி தந்திருந்தார். இங்கே கல்வியே கற்க முடியாத சூழ்நிலை. ஏழை எளிய குடிசையில் இருக்கக்கூடியவர்கள் பிற்படுத்தப்பட்ட மக்கள், தாழ்த்தப்பட்ட மக்கள், நடுத்தர குடும்பத்தில் இருக்கக்கூடியவர்கள், மருத்துவக் கல்லூரி சென்று மருத்துவ படிப்பு படிக்க முடியுமா, முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. ஏனென்றால் நீட் தேர்வை கொண்டு வந்துள்ளார்கள். நீட் தேர்வை யார் படித்து தேர்ச்சி பெற முடியும்? உயர்ந்த ஜாதியில் இருக்கக்கூடியவர்கள், வசதி படைத்தவன் தான் தேர்வு எழுதி தேர்ச்சி பெறமுடியும். ஆகவே, நீட் பிரச்னைப் பற்றி இந்த ஆட்சி கவலைப்படுகிறதா என்றால் இல்லை.
அதேபோல், எச்.ஐ.வி வியாதியைப் பற்றி உங்களுக்குத் தெரியும். எவ்வளவு மோசமான எவ்வளவு கொடுமையான வியாதி இந்த எச்.ஐ.வி வியாதி என்று உங்களுக்குத் தெரியும். அந்த எச்.ஐ.வி தொற்றுள்ள இரத்தத்தை விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர் மருத்துவமனையில் உள்ள ஒரு கர்ப்பிணி பெண்ணிற்கு செலுத்தப்பட்டுள்ளது. கொஞ்சம் யோசனை செய்து பாருங்கள். தாய்மார்கள் இருக்கின்றீர்கள் சிந்தியுங்கள். அதிலும், ரத்தம் கொடுத்தவன் ஒரு இளைஞன். அவனுடைய ரத்தத்தை எடுத்துதான் கர்ப்பிணி பெண்ணுக்கு செலுத்தியிருக்கிறார்கள் அப்படி செலுத்திய காரணத்தினால் இந்தச் செய்தி வெளிவந்ததற்குப் பிறகு அந்த எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட இளைஞன் தற்கொலை செய்துகொண்டு இறந்து விட்டான். அந்தக் குடும்பம் இன்றைக்கு நடு தெருவில் நிற்கிறது. செலுத்திய கர்ப்பிணிப் பெண்ணின் குடும்பமும் ஒரு பரிதவிக்கும் சோகமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறது. அந்தப் பெண்ணோடு அது போய் விடப் போகிறதா வயிற்றில் உருவாகக்கூடிய அந்தக் குழந்தைக்கு வராதா? இதைப் பற்றி இந்த ஆட்சி கொஞ்சம் கூட கவலைப்பட முடியாத நிலையில்தான் போய்க் கொண்டிருக்கின்றது.
அதேபோல் விவசாயிகளின் பிரச்னை. இன்றைக்கு எடப்பாடி பழனிசாமி அடிக்கடி சட்டமன்றத்தில் கூட சொல்கின்றார் நான் ஒரு விவசாயி - நான் விவசாயி குடும்பத்தைச் சார்ந்தவன் என்று. ஆனால் விவசாயி விவசாயி என்று சொல்கிறாரே நான் கேட்கின்றேன், விவசாயி என்று சொல்லிக்கொண்டு முதலமைச்சராக இருக்கக்கூடியவர் மக்களுடைய நிலங்களை எல்லாம் இன்றைக்கு அபகரித்துக்கொண்டு இருக்கக்கூடிய கொடுமை. உதாரணத்திற்கு சேலத்தில் 8 வழிச் சாலை திட்டம். சென்னையிலிருந்து அவர் வசதியாக செல்வதற்காக எட்டு வழிச் சாலை. கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். எட்டு வழிச் சாலை நான் வேண்டாம் என்று சொல்லவில்லை. நாடு வளர்ச்சிக்கு வரவேண்டும் உயர்ந்த இடத்திற்கு வரவேண்டும் நான் அதை மறுக்கவில்லை. ஆனால், விவசாயிகளை அழைத்து உட்கார வைத்துப் பேசி இதை முறையாக செய்யலாமா விளைகின்ற நிலத்தில், இதை செய்யலாமா? அதற்கு மாற்று வழி ஏற்பாடு செய்யப்பட்டதா? அதையெல்லாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
ஏனென்றால், அதற்கு ஒப்பந்தம் போட்டிருக்கிறார்கள். அவர்களுடைய சொந்தக்காரர்களுக்குக் கொடுத்து கமிஷன் பல கோடி ரூபாய் வாங்குகிறார்கள். கமிஷன் வாங்குவதற்காகவே விவசாயிகளின் நிலங்களை எல்லாம் அபகரிக்க நினைப்பவர் தான் விவசாயியா நான் கேட்கின்றேன். விவசாயிகள் நலனில் அக்கறைக் கொண்டு தலைவர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன் விவசாயப் பெருங்குடி மக்களே! நீங்கள் ஒரு பைசா கூட மின்சாரக் கட்டணம் செலுத்த வேண்டாம் என்று சொல்லி அந்தத் திட்டத்தை நிறைவேற்றினார். தலைவர் கலைஞர் விவசாயியா? இல்லை நீங்கள் விவசாயியா? அதேபோல்தான், விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியிருந்த ஒரு கோடி இரண்டு கோடி அல்ல 7000 கோடி ரூபாய் கடன் திமுக ஆட்சிக்கு வந்தால் அந்த 7,000 கோடி ரூபாய் கடனை ரத்து செய்வோம் என்று கலைஞர் சொன்னார். சொன்னதை நிறைவேற்றினார். தலைவர் கலைஞர் விவசாயியா? இல்லை நீங்கள் விவசாயியா?
அதேபோல், இன்றைக்கு வணிகர் பெருமக்கள் எல்லாம் ஜி.எஸ்.டி சட்டத்தால் தங்களுடைய வாழ்வாதாரம் முற்றிலும் இழந்து பரிதவித்துக் கொண்டிருக்கிறார்கள். அதை எதிர்க்க துணிவில்லாமல் இந்த அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
அதேபோல் மோடி பிரதமராக இருக்கிறார் என்றால் மக்களிடம் தேர்தல் பிரசாரத்திற்கு வந்த போது சொன்னார். உலக அளவில் இருக்கக்கூடிய வங்கிகளில் இந்தியாவின் கறுப்புப் பணத்தை மீட்டுக்கொண்டு வரப் போகிறேன் என்று சொன்னார். இதை நம்பி மக்கள் எல்லாம் ஓட்டு போட்டார்கள். மீட்டுக் கொண்டு வரப் போகிறேன் என்று மட்டும் சொல்லவில்லை, மீட்டு வந்து அதிலிருந்து இந்தியாவில் இருக்கக்கூடிய ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் வங்கிகளில் 15 லட்ச ரூபாய் டெபாசிட் செய்ய போகிறேன் என்றார். நான் கேட்கிறேன் 15 லட்சம் வேண்டாம், 15 ஆயிரம்? 15 ஆயிரம் வேண்டாம். ஒரு பதினைந்து ரூபாய் வந்ததா? இல்லை.
இவர்களைப் போல இல்லை நம் தலைவர் கலைஞர். அவர் சொன்னதைத் தான் செய்வார். செய்வதைத் தான் சொல்வார். இன்றைக்கு ஆட்சியில் இருக்கும் மோடியும், எடப்பாடியும் வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ எனச் சொல்லி ஏமாற்றி ஆட்சிக்கு வந்தவர்கள். இவர்களை அகற்றுவதற்கு தான் நீங்கள் தயாராக வேண்டும்.
அதேபோல், தொடக்கத்தில் சகோதரிகள் சொன்னீர்கள். சொந்தக்காலில் பெண்கள் யாருடைய தயவையும் எதிர்பார்க்காமல் இருக்க வேண்டும். யாரையும் எதிர்பார்க்காமல் அவரவர்கள் சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்பதற்காகத்தான் தலைவர் கலைஞர் அவர்கள் 1989-இல் ஆட்சிக்கு வந்த நேரத்தில் முதன்முதலாக தருமபுரி மாவட்டத்தில் சுய உதவிக்குழு துவங்கி, அது அப்படியே பரந்து விரிந்து 2006 ஆம் ஆண்டு நான் அந்தத் துறையின் உள்ளாட்சித்துறை அமைச்சராக பொறுப்பேற்று வழிநடத்தினேன். அப்பொழுது நான் பொறுப்பேற்கிற நேரத்தில், சுய உதவிக்குழு என்பது சமூக நலத்துறையிடம் தான் இருந்தது. ஆனால், சமூக நலத்துறை இடமிருந்தால் இதை சரியான முறையில் பராமரித்து முன்னேற்றப் பாதையில் கொண்டு வர முடியாது, இது உள்ளாட்சித் துறைக்கு வந்தால் தான் சிறப்பாக செய்ய முடியும் என்று சொல்லி, தலைவர் கலைஞர் என்ன செய்தார்கள் என்றால் உள்ளாட்சித் துறைக்கு மாற்றினார்கள்.
என்னிடத்தில் சுய உதவிக் குழுவை ஒப்படைத்தார்கள். நான் அந்த பொறுப்பேற்றதற்குப் பிறகு அந்த உள்ளாட்சித் துறையின் அமைச்சராக இருந்த காரணத்தினால் அதற்கென்று ஒரு தனி முக்கியத்துவம் கொடுத்து, தனி அக்கறை எடுத்து அந்தப் பணியை நான் நிறைவேற்றினேன் என்பது இங்குள்ள மகளிர் சுய உதவிக் குழுவில் இருக்கக்கூடிய சகோதரிகளுக்கு நன்றாகத் தெரியும் என்று நான் நிச்சயமாக நம்புகின்றேன். சுழல் நிதி, வங்கிக் கடன், மானியத்துடன் கூடிய கடன் என இப்படிப் பல திட்டங்களை உருவாக்கினோம். நான் எந்த மாவட்டத்திற்குச் சென்றாலும் எந்த நிகழ்ச்சிக்குச் சென்றாலும் கட்சி நிகழ்ச்சிக்கு சென்றாலும் சரி அரசு நிகழ்ச்சிக்கு சென்றாலும் சரி அங்கே இருக்கக்கூடிய கலெக்டரிடம் சொல்லி வந்திருக்கக்கூடிய உள்ளாட்சித் துறை அதிகாரிகள் சொல்லி மகளிர் சுய உதவிக்குழுகளுக்கு கடன் கொடுக்க ஏற்பாடு செய்யுங்கள் என்பேன்.
அதிகாரிகளும், அமைச்சர்களும் நிகழ்ச்சிக்கு வருகிறார்கள் என்றால் நலத்திட்ட உதவிகள் கொடுக்க வருகிறார்கள் என்றால் ஒரு ஐம்பது பேருக்கு மட்டுமே கொடுக்கிற மாதிரி இருக்கும். 50 பேருக்கு கொடுக்க முடியாவிட்டால் கூட ஒருவர், இரண்டு பேருக்கு கொடுத்துவிட்டு வேகமாக இறங்கிச் சென்று விடுவார்கள். அவர்களுக்கு பொறுமையாகக் கொடுப்பதற்கு நேரம் இருக்காது. அலுப்பு, சலிப்பு ஆகிவிடுவார்கள். அல்லது, அலுவலகத்தில் வந்து வாங்கிக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டுச் சென்று விடுவார்கள். அதற்கு நாம் கமிஷன் கொடுக்க வேண்டியிருக்கும், நலத்திட்ட உதவிகளை வாங்குவதற்கு நாம் கமிஷன் கொடுத்து விட்டு அதை வாங்கி வரவேண்டும். அப்படி எல்லாம் கஷ்டப்பட்ட காலம். இதையெல்லாம் தெரிந்து கொண்டு நான் என்ன செய்தேன் என்றால், சுழல் நிதியைப் பொறுத்தவரைக்கும் கிராமத்தில் இருக்கக்கூடிய மகளிர் சுய உதவிக்குழுவை மூவாயிரம் பேராக இருந்தாலும், நான்காயிரம் பேராக இருந்தாலும் 5000 பேராக இருந்தாலும் மேடையில் இரண்டு மணி நேரம், மூன்று மணி நேரம், 4 மணி நேரம் நின்று கொண்டு அத்தனைபேருக்கும் எந்தவித ஒரு சின்னக் குழப்பமும் இல்லாமல், அவர்களுக்கு எண்கள் கொடுத்து உட்கார வைத்து விடுவோம். பெயர் கொடுத்து படித்து அழைத்தால் கூட குழப்பம் வந்துவிடும். மாறிவிடும். நம்பர் போட்டு கொடுத்து வரிசையாக வந்து கொண்டே இருப்பார்கள். அந்த நம்பரை பார்த்து நிதியை எடுத்து கொடுத்துக் கொண்டே இருப்போம். அவர்களும் வாங்கி விட்டுச் சென்று விடுவார்கள்.
அதை வாங்குகிறபொழுது ஒரு சில தாய்மார்கள் எனக்கு திருஷ்டி எல்லாம் சுத்தி ஆரத்தி எடுத்து நெற்றியில் பொட்டுவைத்து இருக்கிறார்கள். சில தாய்மார்கள் என்னிடத்தில் சொல்லுவார்கள், நாங்களாவது உட்கார்ந்திருக்கிறோம். அந்த நேரம் வரும் பொழுது தான் மேலே வருகின்றோம். ‘நீ ஒன்பது மணிக்கு வந்து நின்ன.... மணி 12 ஆச்சு, இன்னும் நின்றுகொண்டு இருக்கிறாயே, உட்கார்ந்துகொள். கால் வலிக்கும்’ என்பார்கள். நான் சொல்லுவேன், இதை நான் உங்களிடம் கொடுக்கிறபோது நீங்கள் முகமலர்ச்சியுடன் வாங்குகிறீர்கள் அல்லவா அதைப் பார்க்கும்போது என் கால் வலி தானாக பறந்து போய்விடுகிறது. எனக்கு இது தான் நிம்மதி என்று சொல்லுவேன். அந்த அளவிற்கு அக்கறை எடுத்துக் கொண்டு இந்த சுய உதவிக் குழுவின் உடைய வெற்றிக்காக முன்னேற்றத்திற்காக கலைஞர் எந்த உணர்வை கொண்டு வந்தாரோ அதை நிறைவேற்ற வேண்டும் என்று அன்றைக்கு நான் அந்தப் பணியை நிறைவேற்றினேன் என்பது எல்லோருக்கும் நன்றாகத் தெரியும். அன்றைக்கு என்ன நிலைமை, வங்கிக்குப் போனீர்கள் என்றால் பேங்க் மேனேஜர் உங்களை உட்கார வைத்து டீ கொடுத்து விசாரித்துவிட்டு ஒரு மரியாதை கொடுப்பார். ஆனால் இப்பொழுது போனீர்கள் என்றால் உங்களுக்கு ஒரு மரியாதையும் கொடுப்பதில்லை உட்காரவும் சொல்லுவதில்லை. அலட்சியப்படுத்துகிறார்கள், கேவலப்படுத்துகிறார்கள். அந்த நிலைமை இன்றைக்கு வந்திருக்கிறது. இதற்குத்தான் நான் அப்புறப்படுப்படுத்த வேண்டும், முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென சொல்கிறேன்.
இன்றைக்குக்கூட கேரள மாநிலத்தில் ஒரு மிகப்பெரிய அமைப்பு ஒன்று இந்தியா முழுவதும் ஒரு ஆய்வு நடத்தி சிறந்த மனிதர் யார் என்ற தேர்வில் சிறந்த மனிதராக என்னை தேர்ந்தெடுத்து இருப்பதாக செய்தி வந்திருக்கிறது. அதற்கு விருது வாங்க வரவேண்டும் என்று எனக்கு அழைப்பு வந்தது. அந்த விருதை வாங்கக் கூட நான் செல்லவில்லை. ஏனென்றால், அதற்குப் பதில் கட்சியின் சார்பில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அவர்களை அனுப்பி வைத்தேன். ஏனென்றால் அந்த விருதை வாங்குவதைவிட உங்களிடத்தில் நான் விருது வாங்க வேண்டும் என்றுதான் நான் அதிகம் அக்கறை எடுத்துக் கொண்டு இருக்கின்றேன். இங்கு சகோதரி பேசும்போது கூட சொன்னார்கள். முற்றுப்புள்ளி வைக்கத் தயாராக இருக்கிறோம் என்று, உங்களின் முற்றுப்புள்ளி, சாதனை புரியும் நல்லாட்சியை நடத்தும் திராவிட முன்னேற்றக் கழத்தின் ஆட்சிக்கான தொடக்கப்புள்ளியாக அமைய வேண்டும் என்பதை மாத்திரம் உங்களிடத்திலே சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
அதேபோல், சில தாய்மார்கள் பேசுகிற போது சொன்னார்கள். தலைவர் கலைஞர் அவர்களுக்குப் பிறகு, நாங்கள் உங்களைத் தான் நம்புகிறோம் என்று சொன்னீர்கள். நம்புங்கள் நான் இருக்கிறேன். எதைப் பற்றியும் கவலைப்படாதீர்கள். நம்முடைய ஆட்சி வருகிற நேரத்தில் உங்களுடைய குறைகளை போக்கி எல்லாப் பணிகளையும் நிறைவேற்றித் தர காத்திருக்கிறோம்! காத்திருக்கிறோம்! என்று சொல்லி என்னுடைய உரையை நிறைவு செய்கிறேன்.’’