Skip to main content

கோவை அருகே ஆற்றில் குளித்த பள்ளி மாணவர்கள் இருவர் பலி!

Published on 01/10/2017 | Edited on 01/10/2017
கோவை அருகே ஆற்றில் குளித்த பள்ளி மாணவர்கள் இருவர் பலி!

கோவை நகரிலுள்ள இரத்தினபுரி பகுதியைச் சேர்ந்தவர் பால்ராஜ் என்பவரின் மகன் சபரி (வயது-17). இரத்தினபுரி தில்லை நகரைச் சேர்ந்தவர் இராமமூர்த்தியின் மகன் ஹரிபிரசாத் (வயது-17). இவர்கள் இருவரும்  இரத்தினபுரி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.

விடுமுறையை ஒட்டி, சபரி, ஹரிபிரசாத் உள்ளிட்ட ஆறு பேர் நொய்யல் ஆற்றின் இடையில் கட்டப்பட்டுள்ள சித்திரைச்சாவடி அணைக்கு சனிக்கிழமை குளிக்கச் சென்றனர். அணையில் குளித்துக் கொண்டிருந்தபோது, சபரி, ஹரிபிரசாத் ஆகிய இருவரும் ஆழமான பகுதிக்குச் சென்றுள்ளனர். நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கியுள்ளனர்.

இதையறிந்து அருகில் இருந்தவர்கள் நீரில் மூழ்கிய இருவரையும் மீட்க முயன்றனர். ஆனால், அதற்குள்ளாகவே இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். பின்னர் தகவலறிந்து வந்த காரமடை தீயணைப்பு துறையினர் இருவரின் சடலத்தையும் பொதுமக்கள் உதவியுடன் மீட்டனர். இதுகுறித்து தொண்டாமுத்தூர் போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், “நொய்யல் ஆற்றில் நீண்ட நாள்களுக்குப் பின்னர் நீர்வரத்து அதிகமாக வந்து கொண்டு உள்ளதால் இங்கு வருபவர்கள் ஆற்று நீரில் இறங்கி குளிக்கின்றனர். ஆனால், சித்திரைச்சாவடி அணைக்கட்டு பகுதியில் சேறும், சகதியும் அதிகமாக உள்ளதால் அதில் சிக்கி பலர் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. எனவே, மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆபத்து உள்ள இடங்களில் முறையான அறிவிப்பு பதாகைகள் வைக்கவேண்டும், மேலும், ஆற்றில் குளிப்பவர்களைக் கண்காணிக்க போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும்...” என்றனர்.

- சிவசுப்பிரமணியம்

சார்ந்த செய்திகள்