கடலூர் மாவட்டம், சிதம்பரம் மண்வெட்டி பக்கிரி சந்து தெருவைச் சேர்ந்தவர் அண்ணாமலை( 60). இவர் கடந்த 40 ஆண்டுகளாகத் தையல் தொழில் செய்து வருகிறார். பள்ளி மாணவ மாணவிகளின் சீருடைகள், டாக்டர் கோட்டுகள் முதலான ஆடைகளைத் தைத்துத் தருகிறார். இந்நிலையில் கரோனா வைரஸ் சம்பந்தமாக முகமூடி அணிவதன் அவசியத்தை பல்வேறு ஊடகங்கள் வாயிலாக அறிந்து கொண்ட அவர், சிலர் பதுக்கி வைத்து மருத்துவ உபகரணங்களை வியாபாரம் செய்யும் நோக்கத்தையும் தெரிந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள இந்த முகக் கவசத்தை ஏழை எளிய மக்களுக்கு கதர் துணிகள் மூலம் இலவசமாகச் செய்து கொடுக்க வேண்டுமென முடிவு செய்துள்ளார் தையலர் அண்ணாமலை.
இதற்காக கடந்த 4 நாட்களுக்கு மேலாக சுமார் 500க்கும் மேற்பட்ட தனக்கு தெரிந்த நபர்களுக்கும், கடை வாடிக்கையாளர்களுக்கும் தைத்துக் கொடுத்து வருகிறார். இதுகுறித்து அறிந்த சிதம்பரம் நகராட்சி ஆணையாளர் சுரேந்திர ஷா மற்றும் பொறியாளர் மகாதேவன் ஆகியோர் இவரது கடைக்குச் சென்று நேரில் பாராட்டு தெரிவித்து அவரது செயலை ஊக்கப்படுத்தி வாழ்த்து கூறினார்கள்.