நெல்லை மற்றும் அண்டை மாவட்டங்களுக்குப் பரவும் பன்றிக்காய்ச்சல் சாதாரண மக்கள் தொட்டு மேல் தட்டு மக்கள் வரை பீதியையும் உயிர் பயத்தையும் கிளப்பியிருக்கிறது. இது ஒரு பக்கம் என்றால் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சலும் மக்களை அலைக்கழிக்கின்றன. வட கிழக்குப் பருவமழை ஆரம்ப காலத்திலேயே இப்படி என்றால் இன்னும் போகப் போக நிலைமை என்னவாகுமோ என்கிற பீதியும் நிலவுகிறது.
இது போன்றதொரு நிலைமை ஏற்படும் போது வெளி மாநிலத்திலிருந்து தமிழக எல்லைக்குள் வரும் வாகனங்களில் நோய் பரவாமலிருப்பதற்காக பூச்சி மருந்து தெளித்து அனுப்புகிற முறையை அரசு இன்றைய தினம் வரை மேற் கொள்வில்லை என்கிற குற்றச்சாட்டுகளும் கிளம்புகின்றன.
அதே சமயம் கடந்த ஆண்டு கேரளாவில் பறவைக் காய்ச்சல் பரவிய போது. அந்த அரசு தன் மாநிலத்திற்குள் நுழைகிற அனைத்து வாகனங்களிலும், முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பூச்சி கொல்லி மருந்துகளைத் தெளித்து அனுப்பியது..
நிலைமை இப்படி இருக்க மாவட்டத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட் டோர்களின் எண்ணிக்கை தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் அன்றாடம் உயர்ந்து கொண்டே போகிறது நெல்லை அரசு மருத்துவமனையில் 20 பேர்கள் மர்மக் காய்ச்சல் பாதிப்பு காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதில் 5 பேர்களின் ரத்த மாதிரி சோதனைகளில் அவர்களுக்கு பன்றிக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே பாளை கே.டி.சி. நகரைச் சேர்ந்த அன்னலட்சுமி (30) 8 மாத கர்ப்பிணி. அவர் நெல்லை மாநகர காவல் பிரிவில் டிராபிக் போலீஸ் பணியிலிருப்பவர். அவருக்கு காய்ச்சல் கண்டது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் குணமாகாததால் அவர் பாளை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பபட்டார். அங்கு அவரின் ரத்த மாதிரி சோதனையில் பன்றிக்காய்ச்சல் உறுதியானது. ஆனால் அவரை தனிவார்டில் வைத்து சிக்ச்சை அளிக்க உறவினர்கள் வற்புறுத்தியதால், நிர்வாகம், பிரத்யேகப் பிரிவில் தான் வைத்து கிசிச்சை அளிக்க முடியும் என்று கூறியதால், அவரது உறவினர்கள் அவரை வீட்டிற்கு அழைத்துச் சென்று விட்டதாகச் சொல்லப்படுகிறது. அவர் மேல் சிகிச்சைக்காக மதுரை கொண்டு செல்லப்படலாம் என் தகவல்கள் சொல்லுகின்றன.
இது குறித்து நாம் பாளை அரசு மருத்துவமனை டீன் டாக்டர் கண்ணனிடம் பேசியதில் அந்தப் பெண், மருத்துமனை சிகிச்சை வேண்டாம் என்று ஓ.பி.யில். எழுதிக் கொடுத்து விட்டுச் சென்றுள்ளார் என்றார்.
ஆனாலும் பன்றிக்காய்ச்சல் தொடர் பீதியோ ஒரு வகையான தடுமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.